ராமஜெயம் கொலை வழக்கில் மீண்டும் துரித விசாரணை தொடங்குமா?

6 hours ago 3

சென்னை,

தி.மு.க. முதன்மை செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி தொழில் அதிபர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி கொலை செய்யப்பட்டார். அதிகாலையில் நடைபயிற்சிக்கு சென்றபோது அவர் கடத்தி கொலை செய்யப்பட்டதாக தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

ஆனால் ராமஜெயம் எதற்காக கொலை செய்யப்பட்டார்?, கொலைக்கான காரணம் என்ன?, கொலையாளிகள் யார்? என்பது பற்றி துப்பு துலங்காமல் இருந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையிலும் துப்பு துலங்கவில்லை. இதனை தொடர்ந்து இந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.ஐ. போலீசாரும் விசாரணை நடத்தினர். அதிலும் முன்னேற்றம் இல்லாததால் ராமஜெயம் குடும்பத்தினர் இந்த வழக்கை மீண்டும் மாநில போலீஸ் விசாரணைக்கு மாற்றவேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தமிழக போலீசார் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்கும்படி உத்தரவிட்டது. போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் திருச்சியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது வழக்கில் போதுமான முன்னேற்றம் இல்லாததால் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. மற்றும் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரையும் சிறப்பு புலனாய்வு குழுவில் இணைத்து விசாரணையை துரிதமாக நடத்தவேண்டும் என உத்தரவிட்டது.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவினை தொடர்ந்து திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. வருண்குமார், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் மீண்டும் துரித விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து காவல் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது ராமஜெயம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் காவல் துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து இன்னும் வரவில்லை. இது தொடர்பான தலைமை அலுவலக உத்தரவு வந்ததும் விசாரணையில் சூடுபிடிக்கும் என்றார்கள்.

Read Entire Article