ராபின் உத்தப்பா மீதான கைது வாரண்ட்டுக்கு தடை: கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

3 weeks ago 5

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா. இவர் பெங்களூருவில் இயங்கிவரும் தனியார் நிறுவனம் ஒன்றின் இயக்குநராக இருக்கிறார். அந்நிறுவன ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பிஎப் தொகையை அவர்களது பிஎப் கணக்கில் டெபாசிட் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அந்நிறுவனம் ₹23.36 லட்சம் பிஎப் நிலுவைத்தொகையை பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

மண்டல இபிஎப் நிதி ஆணையர், காவல் துறைக்கு எழுதிய கடிதத்தில் உத்தப்பா மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்திருந்தார். இதையடுத்து பிஎப் நிலுவைத்தொகையை செலுத்துவதற்கு டிசம்பர் 27ம் தேதி வரை உத்தப்பாவிற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. அதை செய்யத்தவறும் பட்சத்தில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த நிறுவனத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தெளிவுபடுத்திய ராபின் உத்தப்பா, தனக்கு எதிரான கைது வாரண்ட்டை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ராபின் உத்தப்பாவிற்கு பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட்டை நிறுத்தி வைத்ததுடன், அவருக்கு எதிரான விசாரணைக்கு நீதிபதி தடை விதித்தார்.

The post ராபின் உத்தப்பா மீதான கைது வாரண்ட்டுக்கு தடை: கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article