கோவை: இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு நாளை முதல் ஆள் சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் துவங்குகிறது. இதில் தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் இருந்து பலர் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகின்றன. நாளை (4ம் தேதி) காலை 5 மணிக்கு பிஆர்எஸ் வளாகத்தில் துவங்க உள்ள இந்த முகாமில், தெலங்கானா, குஜராத், கோவை, புதுச்சேரி, தாதர் மற்றும் நாகர் ஹவேலி, டாமன் டையூ மற்றும் லட்சத்தீவை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.
5ம் தேதி, ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்தவர்களும், 6ம் தேதி ராஜஸ்தான், மகாராஷ்டிராவை சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர். 7ம் தேதி அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.
8ம் தேதி சென்னை, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, சேலம், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் விருதுநகரை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். 9ம் தேதி ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, கொல்லம், கோட்டயம் பகுதிகளை சேர்ந்தவர்களும், 10ம் தேதி கோழிக்கோடு, திருச்சூர், மலப்புரம், பாலக்காடு, பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் மற்றும் வயநாடு பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இவர்களுக்கு முதற்கட்டமாக உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். அது முடிந்த பின்பு தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். அதன்பின்பு 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை போன்றவை மேற்கொள்ளப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
The post ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் கோவையில் நாளை முதல் தொடக்கம் appeared first on Dinakaran.