சென்னை: சென்னை வியாசர்பாடியில் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு நிறுவிய ‘கலாம்-சபா' நூலகத்தை விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை நேற்று திறந்துவைத்தார். சென்னை வியாசர்பாடி மல்லிகைப்பூ காலனியில் பிறந்தவர் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு. இவர் தனது இல்லத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான நூலகம் மற்றும் வழிகாட்டி மையத்தை நிறுவியுள்ளார். இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று, நூலகத்தை திறந்துவைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: டில்லிபாபுவின் இந்த முயற்சி, அவரைப்போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கும். உச்சம் தொட்ட ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒருவர் இருப்பார். வியாசர்பாடியில் உயர இருப்பவர்களுக்கு பின்னால் கலாம்-சபா நூலகம் இருக்கும். வியாசர்பாடியில் இருந்ததால் தான் உயர முடிந்தது என்ற நிலையை இந்த நூலகமும், டில்லிபாபுவின் முயற்சியும் உருவாக்கும். இவ்வாறு அவர் பேசினார்.