
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் தாட்டியா மாவட்டத்தில் உள்ள ஜெய்த்பூர் கிராமம் அருகே ராணுவ துப்பாக்கி சூடு தளம் அமைந்துள்ளது. அங்கு இன்று காலை 9 மணியளவில் எதிர்பாராத விதமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.
துப்பாக்கி சூடு தளத்தில் வெடிக்கப்படும் பயிற்சி குண்டுகள், துப்பாக்கி தோட்டாக்களின் சிதறல்கள் ஆகியவற்றை, அருகில் இருக்கும் கிராம மக்கள் எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவற்றில் இருந்து செம்பு உள்ளிட்ட உலோகங்களை அவர்கள் பிரித்தெடுப்பதாக கூறப்படுகிறது.
அவ்வாறு இன்றைய தினம் கங்காராம்(17), ராமு(23) மற்றும் மனோஜ்(16) ஆகிய 3 பேர் துப்பாக்கி சூடு தளத்தில் வெடிக்காத நிலையில் கிடந்த குண்டு ஒன்றை எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த குண்டு வெடித்து சிதறியதில் சம்பவ இடத்திலேயே கங்காராம் உயிரிழந்தார்.
மேலும் ராமு மற்றும் மனோஜ் ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.