ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் ரூ.9000 கோடியில் டாடா கார் தொழிற்சாலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்; 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

1 month ago 10

வேலூர்: ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் ரூ.9000 கோடியில் டாடா கார் தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த தொழிற்சாலை மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. ஆண்டுக்கு 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் விலை உயர்ந்த கார்களை உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனம் சார்பில் தமிழ்நாட்டில் கார் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு ரூ.9,000 கோடி முதலீடு செய்வதற்கு கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசுக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால், சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், ஆண்டுக்கு 2 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் தொழிற்பூங்கா 1,213.43 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. இதில் ரூ.9,000 கோடியில் 470 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நேற்று அடிக்கல் நாட்டி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: டாடா மோட்டார்ஸ் தன்னுடைய திட்டத்திற்காக, ராணிப்பேட்டை மாவட்டத்தை தேர்ந்தெடுத்ததற்காக முதலில் நன்றி சொல்கிறேன். ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்ததுடன், 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் அளிக்க இருக்கிறது. உங்களுடைய (டாடா) நிறுவனங்கள் மூலமாக கூடுதல் முதலீடுகளை நீங்கள் தமிழ்நாட்டில் செய்யவேண்டும். செய்து கொண்டிருக்கிறீர்கள்.

அதை நான் மறுக்கவில்லை, அது உங்கள் கடமை. ஏனென்றால், இது என் மாநிலம் அல்ல, உங்கள் மாநிலம் அல்ல, நம்முடைய மாநிலம். இது உங்களுடைய மாநிலம். நான் அடிக்கடி குறிப்பிடுவது, அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி. இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் பகிர்ந்துகொள்ள விரும்புறேன். 1973ம் ஆண்டு கலைஞர், இதே ராணிப்பேட்டையில் தான் முதல் சிப்காட்டை தொடங்கினார். 50 ஆண்டுகள் கடந்து, இங்கே பல்வேறு நிறுவனங்களை பார்ப்பது பெருமையாக இருக்கிறது. தமிழ்நாடுதான் இந்தியாவின் வாகன உற்பத்தி தலைநகரம். அதுமட்டுமல்ல, எலக்ட்ரானிக் வாகனங்களின் தலைநகரம்.

போர்டு, ஹூண்டாய், ரெனோ, நிஸான் என்று சர்வதேச வாகன நிறுவனங்களும் இங்கே இருக்கிறது. டாடா மாதிரி சர்வதேச மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்ற வாகனங்களை தயாரிக்கின்ற தொழிற்சாலையும் இங்கேதான் இருக்கிறது. கூடுதல் தகவல், இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மொத்த மின் வாகனங்களில், 40 விழுக்காடு தமிழ்நாட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. அதுமட்டுமல்ல, எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் நம்பர் ஒன். நிதி ஆயோக் கொடுத்த ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டிலும் தமிழ்நாடுதான் நம்பர் ஒன் என்று குறிப்பிட்டிருக்கிறது.

இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. நேற்று கூட, ஒரு நாளேட்டில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்தன்மை வாய்ந்தது. பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமூகநீதியை உள்ளடக்கிய வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமத்துவம் போன்ற கொள்கைகள் அடித்தளமாக கொண்ட ஒட்டுமொத்த வளர்ச்சி என்பதால், தமிழ்நாடு மற்ற மாநிலங்களிலிருந்து சற்று தனித்து இன்றைக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது என்று அந்த கட்டுரையில் குறிப்பிட்டு காட்டியிருந்தேன்.

தொழிற்துறைக்கு நான் வழங்கியிருக்கின்ற இலக்கு 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசியாவிலேயே முதலீடுகள் மேற்கொள்ள சிறந்த மாநிலமாக மேம்படுத்த வேண்டும். அந்தப் பயணத்தில் நம்முடைய திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதிலிருந்து, ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். 31 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்ல, அதை விரைந்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அதற்கு சான்று தான் இந்த விழா.

டாடா மோட்டார்சின் இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த ஆண்டு மார்ச் மாதம் தான் போடப்பட்டது. ஆறு மாதத்திற்குள் இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்றைக்கு நடந்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக, தமிழ்நாட்டு இளைஞர்களின் உயர்வுக்காக திராவிட மாடல் அரசு, அனைத்தையும் செய்யும். அதற்கு டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் எங்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்று நிறைவாக, சந்திரசேகரனுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்து, அடுத்து விரைவில் அவர் புதிய தொழிற்சாலையை கொண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் என்பதையும் தெரிவித்து, விடைபெறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

* உலகின் பெரிய நிறுவனங்களுக்கும் தமிழ்நாடுதான் முதல் முகவரியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
* தமிழ்நாடுதான் இந்தியாவின் வாகன உற்பத்தி தலைநகரம். அதுமட்டுமல்ல, எலக்ட்ரானிக் வாகனங்களின் தலைநகரம்.
* இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மொத்த மின் வாகனங்களில், 40 விழுக்காடு தமிழ்நாட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.
* எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் நம்பர் ஒன். நிதி ஆயோக் கொடுத்த ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டிலும் தமிழ்நாடுதான் நம்பர் ஒன்.

The post ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் ரூ.9000 கோடியில் டாடா கார் தொழிற்சாலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்; 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் appeared first on Dinakaran.

Read Entire Article