
விருதுநகரில் பிரசித்தி பெற்ற பராசக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி அங்குள்ள தனியார் பள்ளி திடலில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. பொழுதுபோக்கு அம்சமாக பல்வேறு ராட்டினங்களும் இயக்கப்படுகின்றன.
நேற்று முன்தினம் இரவு விருதுநகர் பாத்திமா நகரை சேர்ந்த கவுசல்யா (வயது 22) என்பவர், ஒரு பெரிய ராட்டினத்தில் ஏறினார். அந்த ராட்டினமானது முன்னும் பின்னும் சுற்றிக்கொண்டே சுழன்று வரும். நவீன ராட்டினங்களில் ஒன்றான இதில் கவுசல்யாவும் ஏறி உற்சாகத்தோடு அமர்ந்திருந்தார்.
முன்னும் பின்னும் சுற்றியபடி ராட்டினத்தின் வேகம் அதிகரித்து சுழன்ற போது தன் இருக்கையில் இருந்து நழுவி மேலே இருந்து கவுசல்யா கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராட்டினத்தில் இருந்தவர்கள் அலறினர். உடனடியாக ராட்டினம் நிறுத்தப்பட்டது. கவுசல்யா பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தால் பொருட்காட்சி திடலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ராட்டின உரிமையாளர் சிட்டிபாபு, மேற்பார்வையாளர் தேவேந்திரன், ஆபரேட்டர் முகேஷ் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.