சென்னை: அதிமுகவில் ஜெயக்குமார், செங்கோட்டையன் கூறும் கருத்துகளில் எது உண்மை, எது பொய் என்பதை அதிமுகவினரிடம்தான் கேட்க வேண்டும் என பிரேமலதா கூறினார். தேமுதிக கொடி நாள் வெள்ளி விழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று கொடியை ஏற்றி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோதே கையெழுத்திடப்பட்டு உறுதி செய்யப்பட்டதுதான் எங்களுக்கான ராஜ்ய சபா எம்.பி பதவி. அந்த ராஜ்யசபா தேர்வுக்கான நாள் நெருங்கும்போது, தேமுதிக சார்பில் யார் ராஜ்யசபா வேட்பாளர் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். விஜய்யுடன் நாங்கள் கூட்டணி அமைப்போமா என்பதை விஜய்யிடம்தான் கேட்க வேண்டும்.
நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கட்சி, இந்த கேள்வியை எங்களிடம் கேட்கக் கூடாது. அதிமுகவின் உட்கட்சி பிரச்னையில் எந்த கருத்தையும் நாங்கள் கூற விரும்பவில்லை. ஜெயக்குமார் ஒரு கருத்தும், செங்கோட்டையன் ஒரு கருத்தும் கூறுகிறார்கள். இதில் எது உண்மை, எது பொய் என்பதை அதிமுகவிடம்தான் கேட்க வேண்டும். முதல்வர் மருந்தகம் திட்டத்தை சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அறிவித்திருப்பது கண் துடைப்பு நடவடிக்கை. இவ்வாறு பிரேமலதா கூறினார். இந்நிகழ்ச்சியில், தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மற்றும் பார்த்தசாரதி, விஜய பிரபாகரன், தேமுதிக தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post ராஜ்யசபா எம்பி தேமுதிக வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம்: பிரேமலதா பேட்டி appeared first on Dinakaran.