ராஜஸ்தான்: ரூ.60 லட்சம் கடன்; வங்கி அதிகாரிகள் தொல்லையால் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை

3 months ago 32

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் பிகானிர் நகரில் ஜெய் நாராயண் வியாஸ் காலனி பகுதியில் வசித்து வந்தவர் ராகுல் மாரு. இவருடைய மனைவி ருச்சி. இந்நிலையில், இந்த தம்பதி, 7 வயது மகளுடன் தற்கொலை செய்து கொண்டது. இதுபற்றி போலீஸ் ஐ.ஜி. ஓம் பிரகாஷ் பஸ்வான் கூறும்போது, ஒரே அறையில் 3 பேரின் உடல்கள் இன்று கண்டெடுக்கப்பட்டன என கூறினார்.

ராகுலின் 14 வயது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றிய தற்கொலை குறிப்பில், கடன் மற்றும் வங்கிகள், பிற நபர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர் என குறிப்பிடப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி ராகுலின் மகன் போலீசாரிடம் கூறிய தகவலில், நேற்றிரவு 10 மணியளவில் அவருடைய தந்தை குடும்பத்தினர் அனைவருக்கும் மருந்து என எதனையோ கொடுத்துள்ளார். சிறுவனும் அதனை குடித்துள்ளான். இரவில் படித்து கொண்டிருக்கும்போது அவன் வாந்தி எடுத்துள்ளான். இதன்பின் நன்றாக தூங்கி விட்டான். இன்று காலை 10 மணியளவில் எழுந்தபோது, ராகுல், ருச்சி மற்றும் சிறுவனின் சகோதரி வாயில் இருந்து ரத்தம் வெளியே வந்தபடி கிடந்துள்ளனர் என தெரிவித்து இருக்கிறான்.

இதன்பின்னர், மாமா, அத்தைக்கு அந்த சிறுவன் தகவல் தெரிவித்துள்ளான். பக்கத்து வீட்டுக்காரர்களும் உதவிக்கு வந்துள்ளனர். போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றினர். ராகுல் மொத்த விற்பனை மருந்து கடை நடத்தி வந்திருக்கிறார். அவருடைய மனைவி ருச்சிக்கு தலையில் ரத்த கசிவு பாதிப்பு இருந்துள்ளது. அவருடைய உடல்நலத்திற்காக ரூ.60 லட்சம் வரை கடன் வாங்கியிருக்கிறார்.

கடனை அடைக்க வீடு, கார் மற்றும் பிற பொருட்களையும் விற்றிருக்கிறார். எனினும், அவரால் கடனை முழு அளவில் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால், வங்கி அதிகாரிகள் உள்பட கடன் கொடுத்தவர்கள் அவரை துன்புறுத்தி வந்துள்ளனர். வீட்டை விற்ற பின்னர், வாடகை வீட்டில் ராகுல் வசித்திருக்கிறார். இந்த சூழலில் இந்த அதிர்ச்சி அளிக்கும் முடிவை அவர் எடுத்திருக்கிறார்.

Read Entire Article