ஜெய்ப்பூர்: ராஸ்தானில் வழக்கமான பயிற்சியின் போது ஜாகுவார் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானப்படை விமானிகள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் உள்ள ராஜல்தேசர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பனோடா கிராமத்தில் நேற்று மதியம் 1.25 மணி அளவில் இந்திய விமானப்படை விமானம் திடீரென விவசாய நிலத்தில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராமமக்கள் போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்து, தீயை அணைக்க முயன்றனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தீயை அணைத்தனர். விபத்து நடந்த பகுதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் விமானத்தில் இருந்த விமானப்படை விமானிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்துக்குள்ளான விமானம் ஜாகுவார் பயிற்சி விமானமாகும். வழக்கமான பயிற்சியின் போது இந்த விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது.
இது குறித்து விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வழக்கமான பயிற்சியின் போது விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 2 விமானிகளும் பலியாகிவிட்டனர். இதற்காக விமானப்படை ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில் விமானிகளின் குடும்பங்களுடன் உறுதியாக நிற்கிறது’ என கூறப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய விமானப்படை நீதி விசாரணையை தொடங்கியிருக்கிறது.
* 5 மாதத்தில் 3வது விபத்து
கடந்த 5 மாதத்தில் ஜாகுவார் விமானம் விபத்துக்குள்ளாவது இது 3வது முறை. கடந்த மார்ச்சில், அரியானாவின் அம்பாலாவில் வழக்கமான பயிற்சியின் போது ஜாகுவார் விமானம் விபத்துக்குள்ளானது. விமானி அவசரகால வெளியேறும் வசதி மூலம் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கடந்த ஏப்ரலில் குஜராத்தின் ஜாம்நகரில் இதே போல ஜாகுவார் விமானம் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது.
இதில் ஒரு விமானி பலியானார். இந்த இரு விபத்துகளும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டது. இரட்டை இன்ஜின் கொண்ட போர் விமானமான ஜாகுவார் இந்திய விமானப்படையில் கடந்த 1979ல் முதல் முறையாக சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விமானம் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாவது குறித்து தீவிரமாக விசாரிக்கப்படுகிறது.
The post ராஜஸ்தானில் பயிற்சியின் போது விமானப்படையின் ஜாகுவார் விமானம் விழுந்து நொறுங்கியது: 2 விமானிகள் பரிதாப பலி appeared first on Dinakaran.