
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி சென்னை சேப்பாக்கத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் - ஜேக் பிரெசர் மெக்குர்க் களமிற்ங்கினர். இதில் மெக்குர்க் முதல் ஓவரின் 4-வது பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
பின்னர் கே.எல். ராகுலுடன் அபிஷேக் போரல் கை கோர்த்தார். இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்த டெல்லி அணி சரிவிலிருந்து நிமிர்ந்தது. அணியின் எண்ணிக்கை 54 ரன்களாக உயர்ந்தபோது அபிஷேக் போரல் (33 ரன்கள்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் அக்சர் படேல் தனது பங்குக்கு 21 ரன்கள் அடித்த நிலையில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய சமீர் ரிஸ்வி 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடி அரைசதத்தை கடந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதி கட்டத்தில் அவருடன் ஜோடி சேர்ந்த ஸ்டப்ஸ் (24 ரன்கள்) அதிரடியை வெளிப்படுத்த டெல்லி அணி வலுவான நிலையை எட்டியது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் அடித்துள்ளது. அதிரடியாக விளையாடிய கே.எல்.ராகுல் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். சென்னை தரப்பில் கலீல் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி சென்னை களமிறங்க உள்ளது.