ராகிங் தடுப்பு விதிகளை மதிக்காத 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: ஐஐடி மும்பை, ஐஐடி கோரக்பூர், ஐஐஎம் திருச்சிக்கு கடும் எச்சரிக்கை

1 week ago 4

புதுடெல்லி: ‘ராகிங்’ தடுப்பு விதிகளை மதிக்காத ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு நோட்டீஸ் அனுப்பி எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் ஒவ்வொரு ஆண்டும் தங்களது கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களிடமிருந்து ‘ராகிங் செய்ய மாட்டோம்’ என்ற உறுதிமொழிப் பத்திரத்தை எழுதி வாங்க வேண்டும். மாணவர்களிடம் ‘விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கான இணக்கச் சான்றிதழ்களை’ பெறும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் ‘ராகிங்’ தடுப்பு பிரவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள், ராகிங் தடுப்பு உதவி எண்ணிலிருந்து விடுக்கப்பட்ட அழைப்புகள் மற்றும் கண்காணிப்புக் குழுவின் நேரடித் தலையீடுகளுக்குப் பிறகும், நாட்டின் பல முன்னணி கல்வி நிறுவனங்கள் இந்த விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து, ராகிங் தடுப்பு விதிகளைப் பின்பற்றத் தவறியதற்காக, ஐஐடி மும்பை, ஐஐடி கோரக்பூர், ஐஐஎம் திருச்சி உள்ளிட்ட 4 ஐஐடிகள் மற்றும் 3 ஐஐஎம்-கள் உட்பட நாடு முழுவதும் 89 உயர் கல்வி நிறுவனங்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நோட்டீஸின்படி, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனடியாகத் தேவையான உறுதிமொழிப் பத்திரங்கள் மற்றும் இணக்கச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த நோட்டீஸ் கிடைத்த 30 நாட்களுக்குள் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறினால், அந்நிறுவனங்களுக்கான பல்கலைக்கழக மானிய நிதி நிறுத்தப்படும்; மேலும் ‘விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனம்’ என்று பகிரங்கமாக அறிவிக்கப்படும்; கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

உத்தரவு என்ன?
* 30 நாட்களுக்குள் முழு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
* அனைத்து மாணவர்களிடமிருந்தும் ஆன்லைன் ராகிங் எதிர்ப்பு பிரமாணப் பத்திரங்களை பெற வேண்டும்.
* ராகிங் விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பின்பற்றாவிட்டால்?
* யுஜிசி மானியம் மற்றும் நிதியை திரும்பப் பெறுதல்
* ராகிங் விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனம் என்று அறிவித்தல்
* நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்தல்

* டாப் கல்லூரிகள்
ஐஐடி மும்பை, ஐஐடி கோரக்பூர், ஐஐடி ஐதராபாத், ஐஐடி பாலக்காடு, ஐஐஎம் பெங்களூரு, ஐஐஎம் ரோத்தக், ஐஐஎம் திருச்சி, ரேபரேலி எய்ம்ஸ் ஆகிய நிறுவனங்கள் உள்பட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 17 நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. மேலும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளிவிவர நிறுவனமும் இடம் பெற்றுள்ளது.

The post ராகிங் தடுப்பு விதிகளை மதிக்காத 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: ஐஐடி மும்பை, ஐஐடி கோரக்பூர், ஐஐஎம் திருச்சிக்கு கடும் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article