டெல்லி : கடந்த ஜூன் மாதம் ரஷ்யாவில் இருந்து ஒரு நாளைக்கு 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. கச்சா எண்ணெய் தேவையில் 85%-க்கும் மேலாக இறக்குமதி மூலம், இந்தியா பூர்த்தி செய்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தது. ஆனால் கடந்த 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை மேற்கத்திய நாடுகள் நிறுத்தத் தொடங்கின. இதனைத் தொடர்ந்து, அதிக தள்ளுபடியில் கச்சா எண்ணெய்யை விற்க ரஷ்யா முன்வந்தது.
இந்த வாய்ப்பை இந்திய நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டன. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்வதில் மத்திய கிழக்கு நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி ரஷ்யா முன்னிலை வகிக்கிறது. தற்போது, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு சுமார் 40% ஆக உள்ளது. இந்த நிலையில் உலகளாவிய வர்த்தக சரக்குகள், சந்தை பகுப்பாய்வு நிறுவனமான கெப்லரின் தரவுகளின்படி, கடந்த ஜூன் மாதம் இந்தியா ஒரு நாளைக்கு 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த 11 மாதங்களில் இல்லாத உச்சமாகும்.
The post ரஷ்யாவிலிருந்து 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி: 11 மாதங்களில் இல்லாத உச்சம்! appeared first on Dinakaran.