வாஷிங்டன்: ரஷ்யா-உக்ரைன் இடையே தொடர்ந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்தப்படும் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 5ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதிபராக தேர்வான பின்னர் முதல் முறையாக மார் ஏ லோகோ எஸ்டேட்டில் நடந்த அமெரிக்காவின் முதல் கொள்கை நிறுவனத்தின் கண்காட்சியில் டிரம்ப் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அதிபர் டிரம்ப், ‘‘மேற்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்காக எனது நிர்வாகம் செயல்படும். ரஷ்யாவும், உக்ரைனும் போரை நிறுத்த வேண்டும். இது குறித்த அறிக்கையை பார்த்தேன். போரில் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தப்படவேண்டும். இதற்காக கடுமையாக உழைக்க போகிறோம்” என்றார்.
சுகாதார துறை அமைச்சர் : புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் நாட்டின் சுகாதார துறை மற்றும் மனித சேவை துறை அமைச்சராக ராபர்ட் எப் கென்னடியை தேர்வு செய்துள்ளார். மேலும் ஜார்ஜியாவின் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் டக் காலின்ஸ் படை வீரர் விவகாரங்களுக்கான அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார். அர்ஜென்டினா அதிபர் ஜேவியல் மிலியை அதிபராகவுள்ள டொனால்ட் டிரம்ப் சந்தித்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் டிரம்ப் சந்திக்கும் முதல் வெளிநாட்டு தலைவர் அதிபர் ஜேவியல் ஆவார் .
The post ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர முன்னுரிமை: டிரம்ப் உறுதி appeared first on Dinakaran.