ரவுடிகள் கலாச்சாரத்தை ஒடுக்கத்தவறிய தமிழக அரசின் மெத்தனப் போக்கு கண்டனத்திற்குரியது - டி.டி.வி தினகரன்

1 day ago 1

சென்னை,

அ.ம.மு.க.பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் ,

சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவில் பெண் பழ வியாபாரியை மாமுல் தர மறுத்ததாக கூறி கொடூரமாக கொலை செய்த ரவுடி, அதனை தடுக்க முயன்ற பெண்ணின் கணவரை தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் அதிகரித்துவரும் ரவுடிகள் கலாச்சாரத்தையும், கூலிப்படையையும் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை, ஆட்சியாளர்களின் ஏவல்துறையாக மட்டுமே செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் தொடங்கி அனைத்து தரப்பினரின் உயிர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ரவுடிகள் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத்தவறிய தமிழக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

அடிக்கடி நிகழும் கொலை, கொள்ளை, போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் அதனை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காத அரசு நிர்வாகத்தின் மீதும், காவல்துறையின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சற்று நேரத்திற்கு முன்பாக கூட சென்னை கிண்டியில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் இருவரை கத்தியால் குத்திவிட்டு அடையாளம் தெரியாத கும்பல் தப்பியோடிய சம்பவமும் நடந்தேறியுள்ளது.என தெரிவித்துள்ளார்.

எனவே, இனியாவது காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளை களைய தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ரவுடிகள் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்

Read Entire Article