சென்னை: ரயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்காததால் பறக்கும் ரயில் நிலையங்கள் புனரமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடத்தில் சேப்பாக்கம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, கோட்டூர்புரம், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி உள்ளிட்ட முக்கிய பறக்கும் ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. பறக்கும் ரயில் நிலையங்களில் போதிய கழிவறை வசதிகள், கடைகள் இல்லையென்றும், சில இடங்கள் சுகாதாரமின்றி இருப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, பறக்கும் ரயில் நிலையங்களை கையகப்படுத்தி மெட்ரோ ரயில் நிலையங்களை போன்று வணிக வளாகங்கள், உணவகங்கள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை மேம்படுத்த சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவெடுத்துள்ளது. சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை ஏற்று நடத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரயில் இயக்கம் முதல் வாகன நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்து, மெட்ரோ ரயில் நிலையம்போல மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. பறக்கும் ரயில் தடத்தில் உள்ள நிலையங்களை மேம்படுத்துவது தொடர்பான ஆய்வு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தொடங்கப்பட்டுள்ளது. ரயில்வே வாரியம் இதற்கான முதன்மை ஒப்புதலை வழங்காமல் உள்ளதால் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக பொறியியல், நிதி மற்றும் வணிக பிரிவுகளில் இருந்து சந்தேகங்கள் கேட்கப்பட்டுள்ளன. அதற்கு விளக்கம் அளித்து கதிசக்தி இயக்குநகரத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பான இறுதிகட்ட முடிவு அடுத்த மாதத்திற்குள் எடுக்கப்படும். பறக்கும் ரயில் நிலையங்களை மொத்தமாக புனரமைப்பது என்பது மிகவும் கடினமான வேலை. ரயில் நிலையங்கள் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள இடங்களை மேம்படுத்த வேண்டியுள்ளது.
இத்திட்டத்தை ரயில் நிலையத்திடம் ஒப்படைத்துவிடலாம் என ஆலோசிக்கப்பட்டது. இருப்பினும் மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைக்க விரைவில் ஒப்புதல் வழங்கப்படும் எனத் தெரிகிறது. ஒப்புதல் வழங்கிய பின்னர் ரயில்வே அமைச்சகத்திடம் இறுதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மேலும் இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த சில ஆண்டுகள் ஆகும். இருப்பினும் ரயில் நிலையங்கள் புதுப்பித்தல், ஏசி ரயில் பெட்டிகள் உள்ளிட்ட வசதிகள் வரஉள்ளதால் இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
The post ரயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்காததால் பறக்கும் ரயில் நிலையங்கள் புனரமைக்கும் பணி தாமதம் appeared first on Dinakaran.