நெல்லை: நெல்லை – செங்கோட்டை ரயில் வழித்தடத்தில் விஸ்டாடோம் எனப்படும் கண்ணாடி பெட்டிகளை இணைத்து இயக்க தெற்கு ரயில்வே சார்பில் ரயில்வே வாரியத்திற்கு முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நூற்றாண்டு பெருமை கொண்ட நெல்லை – கொல்லம் ரயில் வழித்தட மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்றாலும், இவ்வழித்தடத்தில் போதிய ரயில்கள் இயக்கப்படவில்லை என்பதும், இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டே செல்ல விஸ்டாடோம் உள்ளிட்ட பெட்டிகளை கொண்ட பகல் நேர ரயில்கள் இல்லை என்பதும் பெருங்குறையாகவே உள்ளது.
இந்நிலையில் மதுரை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட எம்பிக்கள் உடனான சந்திப்பு தெற்கு ரயில்வே பொது மேலாளர் தலைமையில் கடந்த 24ம் தேதியன்று மதுரையில் நடந்தது. அப்போது எம்பிக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள், கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதில் கொல்லம் எம்.பி. பிரேமச்சந்திரன் கொல்லம் – செங்கோட்டை ரயில் வழித்தடத்தில் கண்ணாடி கூண்டு போன்ற விஸ்டாடோம் ரயில் பெட்டிகள் இணைத்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு பதில் அளித்த தெற்கு ரயில்வே அதிகாரிகள் ‘கொல்லம் – செங்கோட்டை ரயில் வழித்தடத்தில் விஸ்டாடோம் பெட்டிகள் மற்றும் எல்எச்பி ரயில் பெட்டி தொடர்களை ஒதுக்குமாறு ரயில்வே வாரியத்தை அணுகியுள்ளோம்’ என்று பதில் தெரிவித்தனர்.
விஸ்டாடோம் பெட்டிகள் என்பது கூரையின் மேற்பகுதி மற்றும் ஜன்னல் பகுதிகள் முழுவதும் அகன்ற கண்ணாடிகளால் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த பெட்டிகளில் பயணிக்கும்போது இயற்கை அழகை ரசித்துக் கொண்டே செல்ல முடியும். செங்கோட்டை – கொல்லம் ரயில்வே வழித்தடமானது, தமிழ்நாடு- கேரளா இடையே மேற்கு தொடர்ச்சி மலை வழியாக குகைகள், கணவாய்கள், நீர்வீழ்ச்சிகள், மலைகள், காடுகள் என இயற்கை காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாத பகுதியாகும். விஸ்டாடோம் பெட்டிகள் ரயில்களில் இணைக்கப்பட்டால், செங்கோட்டை – கொல்லம் ரயில் வழித்தடத்தில் இயற்கை எழில்மிகு காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க வழிபிறக்கும்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜா கூறுகையில், ‘‘தமிழக, கேரளா எம்பிக்கள் மற்றும் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தொடர் முயற்சியால் கடந்த பிப்ரவரி மாதம் விஸ்டாடோம் பெட்டிகள் கொண்டு ரயிலின் வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தற்போது செங்கோட் டை – கொல்லம் ரயில் வழித்தடத்தில் விஸ்டாடோம் பெட்டிகள் கொண்டு ரயில்களை இயக்க போதுமான பெட்டிகளை ஒதுக்க வேண்டும் என்று ரயில்வே வாரியத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
செங்கோட்டை – கொல்லம் ரயில் வழித்தடத்தில் பகல் நேரத்தில் இயங்கும் ஒரே ரயில் மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஆகும். இந்த ரயிலில் விஸ்டாடோம் பெட்டிகள் இணைக்க வாய்ப்புகள் அதிகம். ஏற்கனவே இந்த ரயிலில் கூட்டம் அதிகமாக இருப்பதால் 14 பெட்டிகளுடன் கூடுதலாக விஸ்டாடோம் பெட்டி உட்பட 8 பெட்டிகள் கூடுதலாக இணைத்து 22 பெட்டிகளுடன் இயக்க வேண்டும். அதற்கு முன்னதாக செங்கோட்டை – கொல்லம் ரயில் வழித்தடத்தில் உள்ள அனைத்து முக்கிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க வேண்டும். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விஸ்டாடோம் பெட்டிகள் கொண்டு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுத்து வரும் தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.’’ என்றார்.
The post ரயில்வே வாரியத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது தெற்கு ரயில்வே செங்கோட்டை – கொல்லம் ரயில் வழித்தடத்தில் விஸ்டாடோம் பெட்டிகள் இணைக்க முன்மொழிவு: பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.