சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் சிக்னல் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது, வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் 13 பெட்டிகள் கவிழ்ந்து சேதமடைந்தன. எனினும், இவ்விபத்தில் பயணிகள் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 19 பேர் படுகாயம் அடைந்தனர். தமிழக அரசும், பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ரயில்வே துறையின் தொடர் அலட்சியப்போக்கு காரணமாக விபத்துகள் அரங்கேறி வருகின்றன என எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து கடந்த 10ம் தேதி காலை 10.35 மணியளவில் 22 பெட்டிகளில் 1600 பயணிகளுடன் பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. அந்த ரயில் பெங்களூரு, காட்பாடி, பெரம்பூர், வியாசர்பாடி வழியாக ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி இரவு 8.27 மணியளவில் பொன்னேரி ரயில் நிலையம் அருகே பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது, நேர்பகுதியில் செல்வதற்கு சிக்னல் கொடுக்கப்பட்டது. இதனால், கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே 120 கிமீ வேகத்தில், முதலாவது வழித்தடத்தில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் வந்துகொண்டிருந்தது.
அப்போது எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவருக்கு, கவரப்பேட்டையில் இருந்து ஒரு கிமீ தொலைவில் லூப் லைனான 2வது தடத்தில் செல்வதற்கு சிக்னல் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதையேற்று டிரைவர் லூப்லைனில் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கியுள்ளார். எனினும், அத்தடத்தில் கடந்த 3 நாட்களாக 75 பெட்டிகளுடன் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிவேகத்தில் வந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், அதே வழித்தடத்தில் நின்றிருந்த சரக்கு ரயிலின் பின் பகுதி மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில், எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் பெட்டி சரக்கு ரயிலின் பெட்டிக்கு அடியில் போய் நின்றது. இன்ஜினுக்கு அடுத்ததாக உள்ள ஏசி பெட்டிகள் உள்பட 13 பெட்டிகள் ஒன்றுடன் மற்றொன்று மோதி, தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு கீழே விழுந்து உருண்டன. மேலும், எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் அருகில் உள்ள 3 பெட்டிகள் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் கவரப்பேட்டை காவல் நிலையத்துக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, ரசாயனம் கலந்த நீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனிடையே ஒன்றுடன் மற்றொன்று மோதி தடம் புரண்ட ரயில் பெட்டிகளில் இருந்த பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி அலறி கூச்சலிட்டனர். அவர்களை போலீசார், வருவாய்துறை, தீயணைப்பு வீரர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் ஒவ்வொருவராக மீட்டு, ஆரம்ப சுகாதார மையம் உள்பட பொன்னேரி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்தில் 19 பேர் காயமடைந்தனர். மேலும், லேசான காயமடைந்த பயணிகளை உடைமைகளுடன் மீட்டு, கவரப்பேட்டையில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை வருவாய் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் அமைச்சர் ஆவடி நாசர், கலெக்டர் பிரபுசங்கர், மாவட்ட காவல்துறை எஸ்பி சீனிவாசபெருமாள், எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட பயணிகளை சந்தித்து, உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினர். விபத்தில் தடம் புரண்ட ரயில்பெட்டிகளில் இருந்த பயணிகள் லேசான மற்றும் படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதில் லேசான காயமடைந்து மீட்கப்பட்ட அனைவரும் அரசு பேருந்துகள் மூலமாக பொன்னேரி ரயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சையளித்து, சிறப்பு ரயில்கள் மூலம் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த மீட்பு பணியில், தேசிய பேரிடர் மீட்புபடை பயிற்சி வீரர்கள், காவல்துறையினர், ரயில்வே ஊழியர்கள் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் இருந்த பொதுமக்கள் களமிறங்கி, பயணிகளை இடிபாடுகளில் இருந்து மீட்டனர். அதே நேரத்தில், தண்டவாளத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமான ரயில் பெட்டிகளை வெட்டி அகற்றி, கிரேன் மூலம் அகற்றும் பணிகளும் நடந்தன. குறிப்பாக, பொக்லைன் இயந்திரத்துடன் 200க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த மீட்பு பணிகளில், 5 கனரக மண் நகர்த்தும் கருவிகளும், 3 ஜேசிபிகளும் ஈடுபடுத்தப்பட்டன.
ரயில் பெட்டிகள் ஒவ்வொன்றும் சராசரியாக 33 டன்னிலிருந்து 45 டன் வரை இருந்ததால், மீட்பு பணியை துரிதப்படுத்த 140 டன் எடை கொண்ட மாமல்லன் அதிதிறன் படைத்த பளு தூக்கும் கருவி பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டு மீட்புபணியில் ஈடுபடுத்தப்பட்டது. அங்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். அதேபோல், ரயில் விபத்து நடந்த இடத்தில், சென்னை தாம்பரத்தில் இருந்து சார்லி என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டு பயணிகளின் உடைமைகளை கண்டுபிடிக்கும் பணி துரிதகதியில் நடந்தது. விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் ஸ்டான்லி அரசு மருத்துவமனை, பொன்னேரி அரசு மருத்துவமனை மற்றும் பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வடமாநிலத்துக்கு செல்ல வேண்டிய பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் முதல் வழிதடத்தில் நேராக செல்லாமல், லூப்லைனில் மாற்றிவிடப்பட்டதால்தான் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தண்டவாளத்தில் கிடந்த பெட்டிகள் ராட்சத கிரேன் மூலம் மீட்கப்பட்டது. நேற்று மாலை 5.20 மணி அளவில் பெட்டிகள் அனைத்தும் மீட்கப்பட்டன. பின்னர் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கின. இன்று காலை வரை மீட்பு பணிகள் நடைபெறும் என்றும் அதன்பின்னர் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ரயில்வே துறையின் தொடர் அலட்சியப்போக்கு காரணமாக விபத்துகள் அரங்கேறி வருகின்றன என ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
* அனைத்து உதவிகளையும் செய்து தர முதல்வர் உத்தரவு
கவரப்பேட்டையில் ரயில் விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளர் முருகானந்தம், அமைச்சர் ஆவடி நாசர் மற்றும் கலெக்டர், எஸ்பி ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சேதவிவரங்களை கேட்டறிந்தார். மீட்பு நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார். அனைவரையும் சம்பவ இடத்துக்குச் செல்லவும் உத்தரவிட்டார்.
* கடந்த 5 ஆண்டில் 200 ரயில் விபத்துகளில் 351 பேர் பலி
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 200 ரயில் விபத்துகள் நடந்துள்ளதாகவும், இதில் 351 பேர் பலியானதாகவும், ரயில்வே வெளியிட்ட புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த வாரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவேக் பாண்டே என்பவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து ரயில்வே வெளியிட்ட புள்ளி விவரத்தில், கடந்த 5 ஆண்டுகளில் 17 ரயில்வே மண்டலங்களில் 200 பெரிய ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இதில் 351 பேர் உயிரிழந்திருப்பதாகவும். 970 பேர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதுகாப்பு, விபத்து தடுக்க நவீன அம்சங்கள் புகுத்தப்பட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்து வந்தாலும் இதுபோன்ற ரயில் விபத்துகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
* ‘துணை முதல்வரின் உத்தரவால் நல்ல சிகிச்சை’: வீடியோ காலில் குடும்பத்தினருக்கு செய்தியை பகிர்ந்த பயணி
கவரப்பேட்டை ரயில் விபத்தில் காயமடைந்த பயணிகள் சிலர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருவள்ளூர் எம்பி சசிதரன் செந்தில் மற்றும் எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒருவர், செல்போன் வீடியோ காலில் குடும்பத்தினருடன் பேசினார். ‘அப்போது, விபத்தில் எனக்கு காயம் ஏற்பட்டுவிட்டது. துணை முதல்வர் உத்தரவின்பேரில் இந்த மருத்துவமனையில் நல்லமுறையில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். நீங்கள் யாரும் பயப்படவேண்டாம். இரண்டொரு நாளில் குணமாகி வந்துவிடுவேன்’ என கூறியுள்ளார்.
* மீட்பு பணியில் இறங்கிய மக்கள் அதிகாரிகள் பாராட்டு
ரயில் விபத்தை அறிந்தவுடன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்த மக்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு பயணிகளை மீட்டனர். குறிப்பாக, பயணிகளுக்கு தங்களால் முயன்ற உதவியை அளிக்கும் வகையில் தண்ணீர் பாட்டில், பிஸ்கட் பாக்கெட் போன்ற உணவு பொருட்களை வழங்கினர். குறிப்பாக, ரயில்வே மற்றும் தீயணைப்பு படையினர் வருவதற்குள் மக்களே களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களை மீட்டதற்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
* இன்னும் எத்தனை குடும்பங்கள் பலியாவது? ராகுல் கண்டனம்
ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில், ‘பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து பதற வைக்கிறது. பாலசோர் ரயில் விபத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. ஏராளமான விபத்துக்களில் பல உயிர்கள் பலியானபோதும் ஒன்றிய அரசு பாடங்கள் எதுவும் கற்கவில்லை. ஒன்றிய அரசு விழித்துக்கொள்ளும் முன் இன்னும் எத்தனை குடும்பங்கள் பலியாவது’ என கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி எக்ஸ் பதிவில், ‘ரயில் விபத்துக்கள் நிகழ்வது நாட்டில் மிகவும் பொதுவானதாகிவிட்டது. ஒன்றிய அரசு பொறுப்பேற்க மறுக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் அச்சத்தோடு உயிரை பணயம் வைத்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்’ என கூறியுள்ளார்.
* அதிர்ச்சியில் உறைந்த பயணி
பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த தீபர் சூக் என்பவர் கூறுகையில், டிடிஆர் அமரும் இருக்கையில் அமர்ந்திருந்தேன். திடீரென நேற்றிரவு 8.45 மணியளவில் பலத்த சத்தம் கேட்டது. இருக்கையில் இருந்து நான் வெளியே வந்து பார்த்தபோது, ரயில்பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி சரிந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியானேன். இவ்விபத்தில் உயிரிழப்பு ஏற்படாதது ஆறுதலளித்தது என்று தெரிவித்தார்.
* சத்தம் கேட்டதும் கண்விழித்தோம், வெளியே வந்ததும் பதைபதைத்தோம்
விபத்தில் தப்பித்த பயணி ஒருவர் கூறுகையில், ‘‘ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பயங்கர சப்தம் கேட்டது. தூங்கிக் கொண்டிருந்த நான் உடனே கண்விழித்தேன். நான் இருந்த பெட்டிக்கு எதுவும் ஆகவில்லை. ஆனால், ரயில் பயங்கரமாக குலுங்கியது. பின்னர் என்னுடன் பெட்டியில் பயணித்தவர்களும் எழுந்தனர். வெளியில் வந்து பார்த்த போதுதான் விபத்து நடந்ததை அறிந்து பதைபதைத்தோம்’’ என்றார்.
* என்ஐஏ விசாரணை
ரயில் விபத்து நடந்த இடத்தில், என்ஐஏ அதிகாரிகள் மோப்ப நாயுடன் வந்து சோதனை நடத்தினர். யாராவது வேண்டும் என்றே தண்டவாளத்தில் உள்ள போல்டை கழற்றி ரயில் லூப் லைனில் செல்ல காரணமாக இருந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அதேசமயம் இது ரயில்வே அதிகாரிகளின் தவறுதலாலும் நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். எனினும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று காலை மற்றும் மாலையில் இருமுறை வந்து சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர்.
* ரயில் விபத்துக்கு யார் பொறுப்பு? காங்கிரஸ் கேள்வி
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் கடந்த 11ம் தேதி இரவு நடந்த ரயில் விபத்து தொடர்பாக வெளிவரும் புகைப்படமும், காணொலியும் மிகவும் பயங்கரமானதாக உள்ளது. இந்த விபத்து எவ்வளவு பயங்கரமானது என்பதை இவை காட்டுகிறது. நாடு முழுவதும் எங்காவது சில இடங்களில் ரயில் விபத்துகள் நடக்கின்றன; இதற்கு யார் பொறுப்பு என்பது தெரியவில்லை. இதுபோன்ற ரயில் விபத்துகளை சிறிய சம்பவம் என, ரயில்வே அமைச்சர் கூறுகிறார். அவர் விபத்தில் சிக்கும் பயணிகளை தவிக்க விட்டுவிடுகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* கவாச் அமைப்பு பாதுகாக்கவில்லையா?
கவாச் தொழில்நுட்பத்தை ஆர்டிஎஸ்ஓ என்ற ஆராய்ச்சி அமைப்பு, 3 இந்திய நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கியது. ஒடிசா ரயில் விபத்துக்குப்பின் அறிமுகமான இந்த தொழில்நுட்பம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ரயில் டிரைவர் சிக்னலை மீறி சென்றால், இந்த கவாச் உடனே எச்சரிக்கை விடுக்கும். குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு பாதையில் இரு ரயில்கள் இருப்பதை அறிந்தவுடன், இந்த தொழில்நுட்பம் ரயிலின் பிரேக்குகளை தானாக இயக்கி ரயிலை நிறுத்தும். மேலும், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட ரயில் அதிவேகமாக செல்லும் போதும் இது ரயில் டிரைவருக்கு எச்சரிக்கை விடுக்கும். ரூ.16.88 கோடி செலவில் இந்த கவாச் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. ஆனால், கவாச்சால் விபத்தை தடுக்க முடியவில்லையா? கவரப்பேட்டையில் விபத்துக்குள்ளான ரயிலில் கவாச் பொருத்தப்படவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
The post ரயில்வே துறையின் தொடரும் அலட்சியப்போக்கால் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல்: கும்மிடிப்பூண்டி அருகே இரவில் பயங்கர விபத்து; 13 பெட்டிகள் சிதறின; 19 பேர் படுகாயம்; எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.