பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழக ரயில்வே காவல்துறை சார்பில் தொடங்கப்பட்ட பெண் பயணிகள் பாதுகாப்பு குழுவில் தமிழகம் முழுவதும் ஒரு மாதத்தில் சுமார் 3,000 பெண் பயணிகள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர், சேலம், கோவை ஆகிய நிலையங்களில் இருந்து தலா 100 பெண் பயணிகள் இக்குழுவில் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர்.
கோவை - திருப்பதிக்கு புறப்பட்ட விரைவு ரயிலில் மகளிர் பெட்டியில் பயணித்த கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளிவிட்ட சம்பவம், பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் பாலியல் சீண்டல் மற்றும் தங்க செயின் பறித்த சம்பவம் ஆகியவை தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாதத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவங்களை அடுத்து, பெண் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரயில்வே போலீஸார், ஆர்.பி.எஃப் போலீஸாருடன் இணைந்து தீவிரமாக கணிகாணிப்பில் ஈடுபடுவது, பாதுகாப்பை அதிகரிப்பது உள்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.