சென்னையின் மிகப்பெரிய போக்குவரத்து இணைப்பு என்ற பெருமை தென்னக ரயில்வேவுக்கு உரித்தானது. நகரத்தில் மின்சார ரயில்களை நம்பி திருவள்ளூர், அரக்கோணம், காஞ்சிபுரம், தாம்பரம் செங்கல்பட்டு, காட்பாடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு வேலைக்கு லட்சக்கணக்கானோர் தினமும் வந்து செல்ல மின்சார ரயில் வசதி பயனுள்ளதாக இருக்கிறது. பத்து நிமிடத்துக்கு ஒரு ரயில் என்ற வகையில் ஒன்றன் பின் ஒன்றாக மூர்மார்க்கெட் காம்பளக்ஸில் இருந்து புறப்பட்டு கொண்டே இருக்கும்.
ஆனால் தற்போது ரயில்வே துறையின் அலட்சியத்தால் அடிக்கடி பராமரிப்பு பணிகள் என்று காரணம் காட்டி வார இறுதி நாட்களில் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதே போன்று கடற்கரை-வேளச்சேரியை இணைக்கும் முக்கிய ரயில் மார்க்கம் பூங்கா நகர ரயில் பாதை புனரமைப்பு பணிகளை காரணம் காட்டி ஓராண்டுக்கு மேலாக சிந்தாரிப்பேட்டையில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான பயணிகள் சொல்லொண்ணா சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தவரை ரயில் சேவையில் பெரிய பாதிப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டவில்லை.
பராமரிப்பு பணிகள் இருந்தால் ஓரிரு ரயில்கள் இரவு நேரம் மட்டும் ரத்து செய்யப்படும். அதே போல் ரயில் நிலையங்களில் தமிழ் மொழி தெரிந்த அதிகாரிகளே அதிகம் இருந்தனர். ஒன்றியத்தில் பாஜ ஆட்சி பொறுப்பேற்றதும் சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில் டிரைவர்கள் உள்பட அனைத்து பணிகளிலும் வடமாநிலத்தவர் அதிகமாக ஆக்கிரமித்துள்ளனர். தமிழ் தெரியாத இவர்களிடம் பொதுமக்கள் சென்று குறைகளை சுட்டிக்காட்ட முடியாத நிலை இருக்கிறது.
தமிழர்களும், தமிழக ரயில் பயணிகளும் தங்கள் உரிமையை பெற முடியாத நிலை தெற்கு ரயில்வே துறையில் இருக்கிறது. முதல்வகுப்பு பெட்டியில் மூன்று மடங்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கின்றனர். இந்த பெட்டியில் ரயில்வே ஊழியர்கள் பெரும்பாலும் பயணிக்கின்றனர். மேலும் வடமாநிலத்தவர் சாதாரண பயண சீட்டை வைத்துக்கொண்டு முதல்வகுப்பில் ஏறி தைரியமாக பயணிக்கின்றனர். இவர்களை எந்த டிக்கெட் பரிசோதகரும் கண்டுகொள்வதில்லை. முதல்வகுப்பு பெட்டியில் ஏறி டிக்கெட் பரிசோதனை நடத்தப்படுவதே இல்லை. அதனால் சாதாரண பெட்டியில் இருக்கும் கூட்டத்தை விட அதிக கூட்டம் முதல் வகுப்பு பெட்டியில் இருக்கிறது.
மேலும் முதல்வகுப்பு பெட்டியில் இருக்கைகள் கறைபடிந்தும், அசுத்தமாகவும் இருக்கிறது. கரப்பான் பூச்சிகள் சர்வசாதாரணமாக உலா வருகின்றன. முதல்வகுப்பு பெட்டியில் சாதாரண டிக்கெட் வைத்து கொண்டு பயணித்தால் அபராதம் விதிக்கப்படும் என்பதை அப்பெட்டியில் உள்ள ஒலிப்பானில் அறிவிக்க வேண்டும். சீரான ரயில்சேவை, பயணிகளுக்கு இடையூறு இல்லாத பயண வசதி, பாதுகாப்பு ஆகியவற்றை ரயில்வே அதிகாரிகள் அடிக்கடி நேரில் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். பழைய ரயில் அட்டவணைகளை அறிமுகப்படுத்த வேண்டும். ரயில்வே ஊழியர்களுக்கு என்று ஒர்க்மேன் என்ற ரயில் முன்பு இயக்கப்பட்டது. அதை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி சீரமைப்புகளை மேற்கொண்டால் மட்டுமே ரயில்வேயின் அவலங்களுக்கு தீர்வு காண முடியும் என்பது பொதுமக்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கிறது.
The post ரயில்வே அவலம் appeared first on Dinakaran.