டெல்லி : ரயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ள நிலையில்,தற்போது சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கையையும் குறைத்து, 3ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நாடுமுழுவதும் அனைத்து நீண்ட தூர ரயில்களிலும் தூங்கும் வசதி கொண்ட சாதாரண பெட்டிகள் மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்களில் கடும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இந்த நிலையில் 3ம் வகுப்பு குளிர் சாதன பெட்டிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ரயில் கட்டணங்கள் மூலம் ஒட்டு மொத்தமாக ரூ. 80,000 கோடி வருவாய் கிடைக்கிறது. இதில் 3ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் மூலம் மட்டும் ரூ.30,000 கோடி வருவாய் கிடைக்கிறது. 2019-20-ம் நிதியாண்டில் 3ம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் மூலம் ரூ. 12,370 கோடி வருவாய் கிடைத்தது. தற்போது 3ம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் மூலம் ரூ.30,089 கோடி வருவாய் கிடைக்கிறது. 3ம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் மூலம் கிடைக்கும் வருவாயை ரூ.37,000 கோடியாக உயர்த்த ரயில்வே துறை முடிவு எடுத்துள்ளது.
வருவாயை பெருக்க ரயில்வே நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கையால் குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்ற நிலை உள்ளது. இதன் காரணமாக குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும், குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண பெட்டிகளில் பயணிக்க டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்படும். அதிக கட்டணம் வசூலிக்கப்படும் ஏசி பெட்டிகளில் மட்டுமே பயணிக்க முடியும் என்ற நிலைக்கு பயணிகள் தள்ளப்படுவர். இதனால், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு ரயில் பயணம் என்பது எட்டாக்கனியாகும்.
The post ரயில்களில் சாதாரண பெட்டிகளை குறைத்து, ஏ.சி.பெட்டிகளை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு : பயணிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.