ரயிலில் கடத்தி வந்த 5கிலோ கஞ்சா பறிமுதல்

1 month ago 7

சேலம், நவ. 20: சேலம் வழியே சென்ற ரயிலில் கடத்தி வரப்பட்ட 5கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். ஒடிசா, ஆந்திராவில் இருந்து சேலம் வழியே கேரளா செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க ரயில்வே போலீசார் தொடர்ந்து ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திப்ரூகர்- கன்னியாகுமரி(விவேக் எக்ஸ்பிரஸ்) ரயிலில் நேற்று ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும், போதை பொருள் தடுப்புபிரிவு போலீசாரும் இணைந்து தீவிர சோதனை நடத்தினர்.

இதில், சேலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அந்த ரயிலில் ஏறி, ஈரோடு ரயில் நிலையம் வரை ஒவ்வொரு பெட்டியாக சோதனையிட்டனர். இதில், முன்பதிவில்லா பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று ஒரு பேக் கிடந்தது. அதனை திறந்து பார்த்தபோது பிளாஸ்டிக் கவர் பண்டல்களில் 5கிலோ கஞ்சா இருந்தது. அதனை கடத்தி வந்த மர்மநபர், போலீஸ் சோதனையை பார்த்ததும் போட்டுவிட்டு தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது. ₹4 லட்சம் மதிப்புள்ள 5கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இக்கஞ்சாவை கடத்தி வந்த மர்மநபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, சேலம் வழியே செல்லும் ரயில்களில் போலீசார் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

The post ரயிலில் கடத்தி வந்த 5கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article