ரம்ஜான் விடுமுறை தினத்தில் வங்கிகள் வழக்கம்போல் இயங்கின: வருமான வரித்துறை அலுவலகங்களும் செயல்பட்டன

2 days ago 3

சென்னை: ரம்ஜான் நாளான நேற்று வங்கிகள் வழக்கம்போல் இயங்கின. இதேபோல வருமான வரித்துறை அலுவலகங்களும் செயல்பட்டன. ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், ரம்ஜான் பண்டிகையன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது.

அதாவது 2024-25ம் நிதி ஆண்டு நேற்று முடிவுக்கு வந்தது. ஏப்ரல் 1ம் தேதி (இன்று) 2025-26 புதிய நிதி ஆண்டு தொடங்க உள்ளது. இதனால், 2024-25 நிதி ஆண்டுக்கான கணக்குகளை முடிக்க வேண்டியது அவசியம் ஆகிறது. எனவே, மார்ச் 31ம் தேதி வங்கிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.

அதில், ‘நிதியாண்டின் இறுதி நாளான மார்ச் 31ல் வரி செலுத்துபவர்களுக்கு உதவும் வகையிலும் சுமுகமான நிதி பரிவர்த்தனைகளை உறுதி செய்யும் விதமாகவும் வங்கிகள் செயல்பட வேண்டும். குறிப்பாக அரசு ரசீதுகள் மற்றும் பேமண்ட்களை கையாளும் வங்கிகள் அவசியம் வழக்கமான நேரப்படி திறந்து இருக்க வேண்டும்’ எனவும் அறிவித்திருந்தது.

ஒருபுறம் வங்கி ஊழியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், மறுபுறம் பல்வேறு காரணங்கள் இருப்பதால் பணிக்குச் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் நேற்று தமிழகம் முழுவதும் வங்கிகள் வழக்கம்போல் இயங்கின. அதுவும் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் வங்கிகள் இயங்கின.

அதாவது, வருமான வரி, ஜிஎஸ்டி, சுங்கம், கலால் உள்ளிட்ட அரசு வரி செலுத்துவது, ஓய்வூதியம் மற்றும் அரசாங்க மானியங்கள், அரசு சம்பளம் மற்றும் பிற பரிவர்த்தனைகள், அரசு திட்டங்கள், மானியங்கள் தொடர்பான பரிவர்த்தனைகள் ஆகியவை வங்கிகளில் நேற்று மேற்கொள்ளப்பட்டது. அதேபோல, வருமான வரித்துறையும் வரி சம்பந்தப்பட்ட பணிகள் இடையூறு இன்றி செயல்பட முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள வருமான வரித்துறை அலுவலகங்கள் நேற்று வழக்கம் போல் செயல்பட்டன.

The post ரம்ஜான் விடுமுறை தினத்தில் வங்கிகள் வழக்கம்போல் இயங்கின: வருமான வரித்துறை அலுவலகங்களும் செயல்பட்டன appeared first on Dinakaran.

Read Entire Article