ரம்ஜானை முன்னிட்டு சமயபுரம் சந்தையில் ரூ.2 கோடி ஆடு விற்பனை

3 days ago 3

சமயபுரம்: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சமயபுரம் ஆட்டு சந்தையில் நேற்று ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. திருச்சி மாவட்டம் சமயபுரம் ஒத்தக்கடையில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். இங்கு ரூ.50 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும். ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சுமார் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனை ஆகும்.

இந்த ஆட்டு சந்தைக்கு திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், ஆத்தூர், விருதுநகர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் டெம்போ, லாரி, வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் செம்மறி ஆடு, வெள்ளாடு உள்ளிட்ட ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். இதேபோல் ஆடுகளை வாங்குவதற்காக பல்வறு ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் ஏராளமானோர் சந்தைக்கு வருவார்கள்.

இந்நிலையில் நாளை (31ம் தேதி) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு ஆடுகளை விற்பனை செய்வதற்காக நூற்றுக்கணக்கான ஆட்டு வியாபாரிகள் நேற்று அதிகாலையிலேயே ஆடுகளுடன் சந்தையில் குவிந்தனர். அதேபோல் ஆடுகளை வாங்கவும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். ஒரு ஆடு சுமார் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரம் வரை விலை போனது. நேற்று ஒரே நாளில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் சுமார் ரூ.2 கோடிக்கு விற்பனையானது.

The post ரம்ஜானை முன்னிட்டு சமயபுரம் சந்தையில் ரூ.2 கோடி ஆடு விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article