ரஞ்சி டிராபி; தமிழகத்திற்கு எதிரான ஆட்டம்.. முதல் நாள் முடிவில் சத்தீஷ்கார் 293/2

2 weeks ago 6

கோவை,

90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் 'எலைட்' பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதன் 3-வது லீக்கில் தமிழ்நாடு- சத்தீஷ்கார் அணிகள் (டி பிரிவு) இடையிலான ஆட்டம் கோவையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சத்தீஷ்கார் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆயுஷ் பாண்டே மற்றும் ரிஷாப் திவாரி ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். இதில் ரிஷாப் திவாரி 46 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். தொடர்ந்து அனுஜ் திவரி களம் இறங்கினார். ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய ஆயுஷ் பாண்டே சதம் அடித்த நிலையில் 124 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து அனுஜ் திவரி உடன் சஞ்சீத் தேசாய் ஜோடி சேர்ந்தார். இருவரும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டனர்.

நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் சத்தீஷ்கார் 90 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 293 ரன்கள் எடுத்துள்ளது. சத்தீஷ்கார் தரப்பில் அனுஜ் திவரி 68 ரன்னுடனும், சஞ்சீத் தேசாய் 52 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தமிழகம் தரப்பில் எம். முகமது, எஸ்.அஜித் ராம் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Read Entire Article