ரஞ்சி கோப்பை: ஜார்கண்டுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற போராடும் தமிழக அணி

2 hours ago 1

ஜாம்ஷெட்பூர்,

90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப் 2' இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். இதன் 7-வது மற்றும் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் நேற்று தொடங்கின.

இதில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜார்கண்ட் உடன் விளையாடுகிறது. இதில் டிரா கண்டாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்ற சூழலில் தமிழக அணி களமிறங்கியுள்ளது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜார்கண்ட் முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷரன்தீப் சிங் 52 ரன்கள் அடித்தார். கேப்டன் இஷான் கிஷன் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் மற்றும் அஜித் ராம் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழகம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. வெறும் 27.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தமிழகம் முதல் இன்னிங்சில் 106 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முகமது அலி 37 ரன்கள் அடித்தார். முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. ஜார்கண்ட் தரப்பில் உத்கர்ஷ் சிங் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

பின்னர் 79 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜார்கண்ட் முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 5 ரன்கள் அடித்திருந்தது. ஷரன்தீப் சிங் ரன் எதுவுமின்றியும், மனிஷி 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஜார்கண்ட் 2-வது இன்னிங்சில் தமிழக அணியின் சுழற்பந்து வீச்சில் விக்கெட்டுகளை தாரை வார்த்தது. 48.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஜார்கண்ட் 154 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தமிழகம் வெற்றி பெற 234 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஜார்கண்ட் தரப்பில் அதிகபட்சமாக உத்கர்ஷ் சிங் மற்றும் ஆதித்யா சந்ரேஷ் சிங் ஆகியோர் தலா 35 ரன்கள் அடித்தனர். தமிழகம் தரப்பில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர்களான கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளும், அஜித் ராம் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழக அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் மற்றும் அவரை தொடர்ந்து களமிறங்கிய பிரதோஷ் ரஞ்சன் பால் தலா 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்த சரிவிலிருந்து அணியை மீட்கும் முயற்சியில் முகமது அலி மற்றும் விஜய் சங்கர் ஈடுபட்டனர். முகமது அலி தனது பங்குக்கு 44 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஆந்த்ரே சித்தார்த் 18 ரன்களிலும் சாய் கிஷோர் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

2-வது நாள் முடிவில் தமிழக அணி 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் அடித்துள்ளது. விஜய் சங்கர் 33 ரன்களுடனும், அஜித் ராம் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தமிழக அணி வெற்றி பெற இன்னும் 97 ரன்கள் அடிக்க வேண்டும். கைவசம் 5 விக்கெட்டுகள் உள்ள நிலையில் வெற்றி பெற போராடுகிறது. 

Read Entire Article