
நாக்பூர்,
90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்குகிறது. 32 அணிகள் இடையிலான இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த ஜம்மு காஷ்மீர், மும்பை (ஏ), விதர்பா, குஜராத் (பி), அரியானா, கேரளா (சி), சவுராஷ்ரா, தமிழ்நாடு (டி) ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.
காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. இதில் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் விதர்பா - தமிழ்நாடு அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற விதர்பா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி முதல் நாள் முடிவில் விதர்பா 6 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் அடித்திருந்தது. கருண் நாயர் 100 ரன்களுடனும், ஹர்ஷ் துபே 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தமிழக அணி தரப்பில் விஜய் சங்கர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தனர்.
இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த விதர்பா முதல் இன்னிங்சில் 353 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கருண் நாயர் 122 ரன்கள் குவித்தார். தமிழகம் தரப்பில் சோனு யாதவ் மற்றும் விஜய் சங்கர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன முகமது அலி 4 ரன்களிலும், ஜெகதீசன் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து சாய் சுதர்சன் 7 ரன்களிலும், விஜய் சங்கர் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் ஆண்ட்ரே சித்தார்த் தனி ஆளாக போராடினார். சிறப்பாக விளையாடிய அவர் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். 2-ம் நாள் முடிவில் தமிழக அணி 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களுடன் திணறி வருகிறது.
பிரதோஷ் ரஞ்சன் பால் 18 ரன்களுடனும், சாய் கிஷோர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விதர்பா தரப்பில் ஆதித்யா தாக்கரே 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். தமிழக அணி இன்னும் 194 ரன்கள் பின்தங்கி உள்ளது.
நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.