நாக்பூர்: ரஞ்சி கோப்பைக்காக நடந்த காலிறுதிப் போட்டியில் 4ம் நாளான நேற்று 198 ரன் வித்தியாசத்தில் தமிழக அணியை விதர்பா அணி வென்றது. நாக்பூரில் தமிழகம் – விதர்பா அணிகள் இடையே ரஞ்சி கோப்பை காலிறுதிப் போட்டி, கடந்த 8ம் தேதி முதல் நடந்து வந்தது. டாஸ் வென்ற விதர்பா பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய விதர்பா அணி 353 ரன்களை குவித்தது. அந்த அணியின் கருண் நாயர் 122, ஹர்ஷ் துபே 69, டேனிஸ் மலேவர் 75 ரன் குவித்தனர். பின் முதல் இன்னிங்சில் சுமாராக ஆடிய தமிழகம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
தமிழகத்தின் ஆந்த்ரே சித்தார்த் 65, பிரதோஷ் பால் 48 ரன் எடுத்தனர். அதன் பின் விதர்பா அணி, 2வது இன்னிங்சில் யாஷ் ரத்தோட் விளாசிய 112 ரன் உதவியுடன், 4ம் நாள் ஆட்டத்தின்போது 272 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இதனால், தமிழகத்துக்கு வெற்றி இலக்காக 401 ரன் நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து 2வது இன்னிங்சை ஆடிய தமிழக வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தனர். நேற்றைய ஆட்ட நேரம் முடிவுக்கு வந்த சமயத்தில் தமிழகம் 61.1 ஓவர்களை சந்தித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 202 ரன் மட்டுமே எடுத்தது.
இதனால், 198 ரன் வித்தியாசத்தில் விதர்பா அணி மெகா வெற்றி பெற்றது. விதர்பா அணியின் நசிகேட் புடே, ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் விதர்பா அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
அரையிறுதியில் குஜராத்
ராஜ்காட்டில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிரா-குஜராத் அணிகள் மோதின. குஜராத் பந்து வீச்சை தேர்வு செய்ய, முதலில் விளையாடிய சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 216 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய குஜராத் முதல் இன்னிங்சில் 511 ரன் குவித்தது. பின்னர் 2வது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா 197 ரன்னிலேயே சுருண்டது. அதனால் குஜராத் ஒரு இன்னிங்ஸ் 98 ரன் வித்தியாசத்தில் 4வது நாளே வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.
சாம்பியன் மும்பை வெற்றி
கொல்கத்தாவில் நடந்த காலிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை முதல் இன்னிங்சில் 315, 2வது இன்னிங்சில் 339 ரன் குவித்தது. கேப்டன் அஜிங்கிய ரகானே 2வது இன்னிங்சில் நேற்று சதம் விளாசினர். எதிர்த்து விளையாடிய அரியானா முதல் இன்னிங்சில் 301 ரன் எடுத்திருந்தது. அதனால் 354 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 4வது நாளான நேற்று விளையாடத் தொடங்கிய அரியானாவை 201 ரன்னிலேயே மும்பை பந்து வீச்சாளர்கள் சுருட்டினர். அதனால் மும்பை 152 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்கும் மீண்டும் தகுதி பெற்றது.
The post ரஞ்சி கோப்பை காலிறுதி: தமிழகத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு விதர்பா தகுதி appeared first on Dinakaran.