சென்னை,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. இந்த படத்தில் மலையாள நடிகர் சாபுமோன் அப்துசமத் வில்லன் கதாபாத்திரத்தில் இடம் பெற்றிருக்கிறார். இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ள இவர் ரஜினியுடன் நடித்தது குறித்து பகிர்ந்துள்ளார்.
'படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஞானவேல் என்னை ரஜினி சாருடன் அறிமுகப்படுத்தினார். அப்போது ரஜினிகாந்த் எழுந்து நின்று 'சார்' என்று அழைத்தார். நான் திகைத்துப் போனேன், எனக்கு பேச்சே வரவில்லை. பின்னர் அவர் என் தோளை தட்டி ஆறுதல் கூறினார். அப்போதுதான் புரிந்தது, தமிழ் மக்கள் மனதில் இவ்வளவு பெரிய இடத்தை எப்படி பிடித்தார் என்று.
இது என்னுடைய முதல் தமிழ்ப் படம் என்று தெரிந்தும், என் தோளைத் தட்டி, 'வெல்கம் டு தி தமிழ் இண்டஸ்ட்ரி' என்றார். எட்டு நாட்கள் நாங்கள் சேர்ந்து படமெடுத்தாலும், அவருடன் ஒரு படம் கூட எடுக்க முடியவில்லை. ஆனால் அவரது வார்த்தைகள் எப்போதும் என்னுடன் இருக்கும். இது உண்மையிலேயே என் வாழ்க்கையில் என் சிறந்த தருணம்" என்றார்