சென்னை,
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கடந்த 2022-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்தை இயக்கி இருந்தார். இப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதனைத்தொடர்ந்து, விஜய் நடிப்பில் 'லியோ' படத்தை இயக்கினார். இப்படமும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
இதனைத்தொடர்ந்து, ரஜினிகாந்தின் 171-வது படமான 'கூலி' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், ரஜினிக்கும் கமலுக்கும் உள்ள வித்தியாசத்தை பகிர்ந்துகொண்டார். இது குறித்து அவர் கூறுகையில்,
'ரஜினி சார், இயக்குனர்களின் நடிகர். அவருடைய படத்தில் சக நடிகர் எப்படி நடிக்கிறார், பதிலுக்கு நாம் எப்படி நடிக்க வேண்டும் என எப்போதும் யோசித்து கொண்டே இருப்பார். கமல் சார் முற்றிலும் மாறுபட்ட ஒருவர். தான் ஒரு தொழில்நுட்ப கலைஞர் என்று அவரே கூறுவார். எனவே ஒரு காட்சி குறித்து ஒரு நடிகரிடமும், தொழில்நுட்ப கலைஞரிடமும் பேசுவதில் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். இருவரும் கேமராவுக்கு முன்பு வந்துவிட்டால் நடிகர் என்பதை மறந்து அந்த காதாபாத்திரங்களாகவே மாறிவிடுவார்கள்' என்றார்.