புதுடெல்லி,
நடிகர் ரஜினிகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இதய ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை சரிசெய்யும் சிகிச்சைகள் நேற்று அதிகாலை 5 மணி முதல் தொடங்கி நடந்தது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அவரது இதயத்தில் ரத்தநாளத்தில் 'ஸ்டென்ட்' வைக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது ரஜினிகாந்த் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் விரைவில் உடல்நலம் பெற வேண்டுமென திரை, அரசியல் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து அவரது மனைவி லதாவிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். மேலும் ரஜினி விரைவில் பூரண குணமடைய பிரதமர் வாழ்த்து தெரிவித்ததாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அண்ணாமலை, "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்க பிரதமர் நரேந்திர மோடி லதா ரஜினிகாந்திடம் தொலைபேசியில் பேசினார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்" என்று தெரிவித்துள்ளார்.