லக்னோ: உத்தரபிரதேசத்தில் யோகி தலைமையிலான ஆட்சியில் கடந்த 8 ஆண்டில் 222 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக மாநில காவல்துறை வெளியிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடந்து வருகிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை கட்டுக்கு கொண்டு வரும் வகையில், முன்னெப்போதும் இல்லாத அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி கடந்த எட்டு ஆண்டுகளில், காவல்துறையினர் நடத்திய என்கவுன்டர்களில் 222 கடுமையான குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 8,118 குற்றவாளிகள் துப்பாக்கி சூட்டில் காயமடைந்துள்ளனர்.
இதுவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 79,984 குற்றவாளிகள் மீதும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 930 குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் பல நூறு கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டும், இடித்து தரைமட்டமாக்கப்பட்டும் உள்ளது. பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை, 27,425 வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்; இதில் 11,254 போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகளும், 3,775 வரதட்சணை கொலை வழக்குகளும் அடங்கும்.
கடந்த ஜூலை 2023 முதல் டிசம்பர் 2024 வரை, 51 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், 6,287 பேருக்கு ஆயுள் தண்டனையும், 1,091 பேருக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனையும், 3,868 பேருக்கு 10 முதல் 19 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 5,788 பேருக்கு 5 ஆண்டுகளுக்கும் குறைவான சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டன. மேலும் 2017ம் ஆண்டு முதல், ஏடிஎஸ் தனிப்படை மூலமாக 130 தீவிரவாதிகளையும் 171 ரோஹிங்கியா மற்றும் வங்கதேச குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்துள்ளதாக மாநில அரசின் காவல் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post யோகி தலைமையிலான பாஜக ஆட்சியில் 222 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை: 8 ஆண்டில் நடந்த குற்ற விபரம் வெளியீடு appeared first on Dinakaran.