யார் எந்த வேஷம் போட்டு வந்தாலும் திமுகவை யாரும் அசைக்க முடியாது - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

1 week ago 5

விருதுநகர்,

விருதுநகரில் திமுக செயற்குழுக் கூட்டம் இன்று தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. திமுக மாவட்டச் செயலாளர்களும் அமைச்சர்களுமான சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமை வகித்தனர்.

இக்கூட்டத்தில், பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, முதல்-அமைச்சர் வருகை நமக்கு 2வது தீபாவளி. நவம்பர் 10ம் தேதி 2வது தீபாவளியை நாம் கொண்டாட உள்ளோம். அன்றைக்குத்தான் நமக்கு உண்மையான தீபாவளி. நமக்கு எழுச்சியையும் உற்சாகத்தையும் தரும் வகையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வர உள்ளார். இந்த முறை இதுவரை அளித்த வரவேற்புகளை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு மாபெரும் வரவேற்பு அளிக்க வேண்டும். கடந்த முறை 30 ஆயிரம் பேர் வரவேற்றோம். இந்த முறை இரண்டு மடங்கு அதிகமானோர் கூடி வரவேற்க வந்திட வேண்டும். உங்களை எல்லாம் நேரில் சந்தித்து உரையாட வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடன் முதல்-அமைச்சர் வருகிறார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்றெடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான முன்னோட்ட பணிகளை நாம் தொடங்க வேண்டும். தொகுதி பொறுப்பாளர்களுக்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். வாக்காளர் சேர்ப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்,

இம்மாதம் 10ம் தேதி காலை 11 மணிக்கு முதல்-அமைச்சர் விருதுநகர் வருகிறார். இம்முறை குறைந்தபட்சம் 60 ஆயிரம் பேர் திரண்டு வந்து முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளிக்க வேண்டும். வரவேற்பு மிக பிரம்மாண்டமாக இருக்க வேண்டும். 7 தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்வீர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக வரவேற்பு இருக்க வேண்டும். கட்சி நிர்வாகிகளையும் முதல்வர் சந்திக்க உள்ளார். 11ம் தேதி புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்து, பட்டம்புதூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் வழங்குகிறார். நீங்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.

அடுத்து வருவதும் நமது ஆட்சிதான். 4 பேர், 5 பேர் பிரிந்து நிற்பதால் நமக்கு லாபம்தான். யார் எந்த வேஷம் போட்டு வந்தாலும் திமுகவை யாரும் அசைக்க முடியாது. இன்னும் 25 ஆண்டுகள் தமிழகத்திற்கு ஆளப்போகும் கட்சி நாம்தான். அதற்கு வரும் சட்டமன்றத் தேர்தல் முக்கியமான தேர்தல். 200 தொகுதிகளில் நாம் வெற்றிபெற வேண்டும் என தெரிவித்தார்.

Read Entire Article