
சென்னை,
சென்னையை அடுத்த நெற்குன்றம், செல்லியம்மன்நகர் பகுதியை சேர்ந் தவர் பரத் கூலி தொழிலாளி இவரது மனைவி லதா (வயது 20). பரத் வழக்கம் போல நேற்று மாலை பணி முடிந்து வீடு திரும்பினார். அப்போது தனது சம்பள பணம் மாயமாகி இருப்பது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பூந்தமல்லி நெடுஞ்சாலை யில் தவற விட்ட பணத்தை தேடி கணவன் மனைவி இருவரும் தேடிக்கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் எதிர்பாராத விதமாக லதா மீது வேகமாக மோதினார். இதில் தூக்கி வீசப்பட்டதில் தலையில் அடிபட்டு லதா படுகாயமடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி லதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் விபத்து ஏற்படுத்தியது விருகம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சங்கர் கணேஷ் என்பது தெரிந்தது, அவரை உடனே போலீசார் கைது செய்தனர்.