டெல்லி: பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவதில் பாஜகவின் சித்தாந்தம் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். வரும் 5ம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவுக்கு சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலையொட்டி ஆம் ஆத்மி-யும், பாஜகவும் பரஸ்பர குற்றச்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால்; மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 500 தொழிலதிபர்களின் ரூ.10 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்திருப்பதாக கூறினார்.
இதில் குறிப்பிட்ட ஒரு தொழிலதிபருக்கு மட்டுமே ரூ.46,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக சாடிய அவர், மற்றொரு தொழிலதிபர் ரூ.6,500 கோடி கடனை திருப்ப செலுத்த வேண்டிய நிலையில், அவருக்கு ரூ.5,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இந்த நாட்டில் ஏழைகள், நடுத்தர வர்க்க மக்கள் பல்வேறு வகைகளில் அரசுக்கு வரி செலுத்திகின்றனர் என்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு மக்களின் மீது மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இவ்வாறு பெறப்படும் வரியை மக்கள் நலன்களுக்கு செலவிட வேண்டுமே தவிர தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்யக்கூடாது என கெஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லி மக்களுக்கு செலவு செய்யப்படும் என்ற தமது மடல் தேவையா, இல்லை பொதுமக்களின் பணத்தை சில பணக்கார நண்பர்களின் கைகளுக்கு கொண்டு செல்லும் பாஜக மாடல் தேவையா என்பதை தலைநகர் மக்கள் தீர்மானிக்கும் நேரம் நெருங்கிவிட்டதாகவும் கெஜ்ரிவால் கூறினார். ஆம் ஆத்மி தலைமையிலான அரசில் டெல்லி மக்கள் ரூ.25,000 மாதந்தோறும் நலத்திட்டங்கள் மூலம் பெறுவதாக தெரிவித்த அவர், பாஜக ஆட்சிக்கு வந்தால் அவை அனைத்து நிறுத்தப்படும் என்றார். ஏனென்றால் அவை அவர்களின் சித்தாந்தங்களுக்கு எதிரானது என கெஜ்ரிவால் கூறினார்.
The post மோடியின் நண்பர்களின் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி; இதுவே பாஜக சித்தாந்தம்: கெஜ்ரிவால் காட்டமான விமர்சனம் appeared first on Dinakaran.