கூடலூர்: மோடி பிரதமரான 10 ஆண்டுகளில் அதானி, அம்பானி மட்டுமே முன்னேறி வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாரில், தேயிலைத் தோட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் சார்பில் அம்பேத்கர் 134வது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. இவ்விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது: உலகம் முழுவதும் இன்று தொழிலாளர்களின் உழைப்பை போற்ற வேண்டும் என்று கொண்டாடி வரும் வேளையில், தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுவதும், பணி பாதுகாப்பின்மை பிரச்னையும் இன்னும் நீடிக்கிறது.
சட்டப்படியான உரிமைகள் கிடைப்பதில்லை. இங்கே சில தோட்ட கம்பெனிகள் பல மாதங்களாக சம்பளம் தராமல் நிறுத்தி வைத்துள்ளன. அடிப்படை வசதிகள், பராமரிப்பு பணிகளும் தொழிலாளர்கள் குடியிருப்புகளில் ஏற்படுத்தித் தர வேண்டும். இப்படி பல்வேறு கோரிக்கைகள் இருக்கும் நிலையில், கேரளாவில் உள்ள அரசு இடதுசாரி அரசாக உள்ளது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் ஒரு இடதுசாரி கட்சி தான். அந்த உரிமையோடு கேரள முதல்வரிடம், தொழிலாளர்கள் நலன் சார்ந்த கோரிக்கையை முன் வைக்கிறோம். அதை இந்த அரசு நிறைவேற்றி தர வேண்டும்.
இப்போதுள்ள ஒன்றிய அரசு அகற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இங்குள்ள இடதுசாரிகளும், காங்கிரசும், திராவிடக் கட்சிகளும், விசிக உள்ளிட்ட கட்சிகளும் ஒரே நேர்கோட்டில் உள்ளன. இதில் அரசியல் ஆதாயம் என்பது இல்லை. உலகத்தில் எந்த மதமாக, இனமாக, தேசமாக இருந்தாலும் உழைப்பாளர்கள் சுரண்டப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். அதனால்தான் மோடி பிரதமரான 10 ஆண்டுகளில் அதானியும், அம்பானியும் உலக பணக்காரர்கள் வரிசையில் முன்னேறிக் கொண்டே இருக்கிறார்கள் என்றார்.
The post மோடி பிரதமரான 10 ஆண்டுகளில் அதானி, அம்பானி மட்டுமே முன்னேற்றம்: திருமாவளவன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.