மொபைல் ஃபோனுக்கு Bye Bye…மரப்பொம்மைகளுக்கு Hi Hi!

2 months ago 22

நன்றி குங்குமம் தோழி

உங்க வீட்டில் குழந்தை இருந்தால், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று மற்றவர்கள் கேட்டால் நம்மில் அனைவரும் சொல்லும் ஒரே வாக்கியம் செல்போன் அல்லது டி.வி பார்க்கிறான் என்பதாகத்தான் இருக்கிறது. இன்றைய குழந்தைகள் வெளியே சென்று சாலையிலோ அல்லது பூங்காக்களிலோ விளையாடி மகிழ்வதை பார்க்க முடிவதில்லை. அவர்களும் அதை விரும்புவது இல்லை. மேலும் இவர்கள் பொம்மைகளை கூட வைத்து விளையாடுவதில்லை. செல்போனே அவர்களின் பொம்மையாக மாறிவருகிறது. அவர்கள் மற்ற பொருட்களை கொண்டு விளையாடுவதைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறது.

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு விளையாடுவது என்பது மிகவும் முக்கியமானது. எப்போதும் செல்போனில் மூழ்கியபடியே அவர்கள் இருப்பது ஆபத்தினை உண்டாக்கும். அவர்கள் கையில் இருக்கும் செல்போனை பிடுங்கிக் கொண்டு விளையாட்டுப் பொருட்களை கொடுக்கலாம். ஆனால் அவை ஆபத்தை ஏற்படுத்தாதபடி பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதனை மனதில் கொண்டு ஆக்கப்பூர்வமான விளையாட்டுப் பொருட்களை அறிமுகம் செய்துள்ளார் வுட்பீ (Woodbee) பொம்மை நிறுவனத்தின் நிறுவனர் கோகிலா.

‘‘என் பேரப்பிள்ளைகள் விளையாடுவதற்காகத்தான் நாங்களே டிசைன் செய்து, விளையாட்டுப் பொருட்களை செய்தோம். காரணம், அவர்களுக்காக நான் பொம்மை வாங்க கடைக்கு சென்ற போது அங்கு எல்லாம் பிளாஸ்டிக்கினால் ஆன விளையாட்டுப் பொருட்கள்தான் இருந்தன. அந்த பொம்மைகளை வாங்க எனக்கு மனமில்லை. நம்முடைய பாரம்பரிய மரத்தாலான பொம்மைகளை கொடுக்க விரும்பினேன்.

என் மகன் மரம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருவதால், அங்கிருக்கும் மரத் துண்டுகளில் பொம்மைகளை செய்து கொடுத்தோம். அவர்களுக்கும் அது ரொம்பவே பிடித்திருந்தது. பிளாஸ்டிக் மற்றும் தீங்கான வேதிப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் விளையாட்டுப் பொருட்களுக்கு மரப் பொம்மைகள் சிறந்த மாற்றாக இருந்தது. அதனால் அவர்களுக்கு மேலும் சில ஆக்கப்பூர்வமான விளையாட்டு பொருட்களை செய்து கொடுக்கும் முயற்சியில் இறங்கினோம்.

முதலில் வேப்ப மரத்தை பயன்படுத்திதான் விளையாட்டுப் பொருளை தயாரித்தோம். குழந்தைகளுக்கு எந்த ஒரு பொருளையும் வாயில் வைக்கும் பழக்கம் இருக்கும். அவ்வாறு கொண்டு சென்றாலும், அது தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டுமென நினைத்தோம். வேப்ப மரத்தால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்களைக் கொண்டு என் பேரக் குழந்தைகள் ரொம்ப ஆர்வத்துடன் விளையாடினார்கள். அதைப் பார்த்த போதுதான் இதையே ஏன் மற்ற குழந்தைகளுக்கும் தயாரித்து கொடுக்கக் கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் கொரோனா பாதிப்பு இருந்ததால், எங்களின் எண்ணத்தினை செயல்படுத்த பயன்படுத்திக் கொண்டோம். எங்களின் தயாரிப்புகளைகுழந்தைகள் விரும்பி வாங்கி விளையாடுவதைப் பார்க்கும் போது மனசுக்கு நிறைவாக உள்ளது’’ என்றவரின் மருமகள்களும் இவரின் நிறுவனத்திற்கு தூணாக இருந்து செயல்பட்டு வருகிறார்கள்.

‘‘முதலில் எங்களின் சொந்த பயன்பாட்டிற்கு பொம்மைகளை தயாரித்ததால், அதனை நாங்க மார்க்கெட்டிங் செய்ய விரும்பல. ஆனால் இதனை ஒரு நிறுவனமாக எடுத்து செயல்படுத்தும் போது, அது மற்றவர்களிடமும் சேர வேண்டும். அப்போது என் இரு மருமகள்களும் இதனை இன்ஸ்டாவில் பதிவிடலாம் என்று ஐடியா கொடுத்தாங்க. அதன் படி பொம்மைகளை படம் பிடித்து நாங்க பதிவு செய்தோம். நல்ல வரவேற்பு கிடைத்தது. வாடிக்கையாளர்களின் தொடர் வரவேற்பு காரணமாக நாங்க பொம்மைகளை அதிக அளவு தயாரிக்க துவங்கினோம்.

எங்களின் பொம்மைகள் அனைத்தும் மரத்தினால் மட்டுமே ஆனவை. அதில் பூசப்படும் வண்ணங்களும் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது என்று சான்றிதழ் பெற்று இருக்கிறதா என்று கவனித்துதான் பயன்படுத்துகிறோம். மேலும் BIS சான்றளிக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்களை மட்டும்தான் நாங்க சந்தைப்படுத்துகிறோம். என் இரு மருமகள்களும்தான் ஒவ்வொரு விளையாட்டுப் பொருட்களை தனி கவனத்துடன் உருவாக்குகிறார்கள்.

மேலும் குழந்தைகளுக்கு பொம்மையாக கொடுக்காமல், அறிவுத் திறன்களை வளர்க்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு வடிவமைத்தோம். இதன் மூலம் ஒவ்வொரு பொம்மையிலும் ஏதாவது ஒரு கற்றல் செயல்பாடும் இணைந்திருக்கும். குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடுவது மட்டுமில்லாமல் அவர்களின் கற்றல் திறனும் மேம்படும்’’ என்றவர், விளையாட்டுப் பொருட்களின் பயன்களையும் பகிர்ந்து கொள்கிறார்.

“இப்போதெல்லாம் குழந்தைகள் மொபைல் மற்றும் வீடியோ விளையாட்டுகளில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கு இது போன்ற உபயோகமான விளையாட்டுப் பொருட்களை கொடுப்பதன் மூலம், அவர்கள் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் அறிவார்ந்தவர்களாகவும் வளர்வார்கள். வேப்ப மரம் மற்றும் பீச்வுட் மரங்களை தான் பயன்படுத்துகிறோம். பேலன்ஸ் பீம், ஜிம் செட் விளையாட்டு, ட்ரப்பீஸ் பார், லர்னிங் டவர், மேத் ராட், ஷேப் ஷார்ட்டர் போன்ற விளையாட்டுகள் மட்டுமில்லாமல் மாண்டசரி கல்வி முறையில் பயன்படுத்துவதற்கான கற்றல் சார்ந்த விளையாட்டுப் பொருட்களையும் நாங்கள் தயாரிக்கிறோம். குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல், பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானத்திலும் ஆக்கப்பூர்வமான விளையாட்டுப் பொருட்களை அமைத்து தருகிறோம். சிலர் தங்கள் வீட்டிலேயே இது போன்ற விளையாட்டுகளை அமைக்க சொல்லி கேட்பார்கள். அவர்களின் வீட்டின் அமைப்பிற்கு ஏற்ப ெசய்து தருகிறோம்’’ என்றவர், மரத்தினால் விளையாட்டுப் பொருட்களை செய்யும் போது சந்தித்த சவால்களை எடுத்துரைக்கிறார்.

‘‘பிளாஸ்டிக்கில் இந்தப் பொருட்களை மிகவும் எளிமையாக செய்து முடிக்கலாம். அதற்கென அச்சுகள் இருக்கும். அதை பயன்படுத்தி பொம்மைகளை தயாரிக்கலாம். ஆனால் மரப்பொம்மைகள் பொறுத்தவரை ஒவ்வொன்றையும் தனித்தனியாகத்தான் செய்ய வேண்டும். ‘ஐரிஸ் டோம்’ என்ற அரைவட்ட வடிவிலான விளையாட்டினை தயாரிக்கும் போது பல சவால்களை சந்தித்தோம். அரை வட்ட வடிவத்தை கொண்டு வருவதற்கு எங்களின் கணித ஆசிரியர் உதவினார். இறுதியில் நாங்கள் எதிர்பார்த்த வடிவத்தில் சரியான கோணங்களில் செய்து முடித்தோம்.

ஐரிஸ் டோம் விளையாட்டினை வெளிநாடுகளில்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் நாங்கதான் முதன்முறையாக இந்த ஐரிஸ் டோம்களை தயாரித்து வருகிறோம். மேலும் ஒரு சின்ன தவறு கூட தயாரிப்பில் ஏற்படக்கூடாது என்பதில் நாங்க மிகவும் கவனமாக இருந்து வருகிறோம். அதனை என் மருமகள்கள்தான் கவனித்துக் கொள்கிறார்கள். என் மூத்த மருமகள் ரூபிணி, தயாரிப்பிற்கான பொறுப்பையும், இளைய மருமகள் சுகன்யா பொருட்களை சந்தைப்படுத்தும் பொறுப்பையும் செய்வார்கள்” என்று நெகிழ்ச்சியுடன் அவர்களின் வெற்றிக்கதையை பகிர்ந்து கொண்டார் கோகிலா.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

The post மொபைல் ஃபோனுக்கு Bye Bye…மரப்பொம்மைகளுக்கு Hi Hi! appeared first on Dinakaran.

Read Entire Article