மையோசைடிஸ் ஆபத்தானதா?

2 months ago 24

நன்றி குங்குமம் டாக்டர்

ஓர் அலசல் ரிப்போர்ட்!

நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் கையில் ட்ரிப்ஸ் ஏறும் புகைப்படத்துடன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அது வைரலானது. பின்னர் அதில் அவர், “சில மாதங்களுக்கு முன், மையோசைடிஸ் (Myositis) எனப்படும் தசை அழற்சி பாதிப்பு எனக்குக் கண்டறியப்பட்டது. குணமானபின் இதை பகிர நினைத்திருந்தேன்.

ஆனால், அதற்கு இன்னும் நாளாகும் என நம்புகிறேன். இதிலிருந்து விரைவில் முழுமையாக குணமடைவேன் என மருத்துவர்கள் நம்புகிறார்கள். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் எனக்கு நல்ல நாட்களுக்கும் மோசமான நாட்களும் இருந்திருக்கின்றன. இன்னும் ஒரு நாளைக் கூட சமாளிக்க முடியாது என நினைக்கும்போது அந்த நிமிடமும் எப்படியோ கடந்து செல்கிறது. இதுவும் கடந்து போகும்” என்று குறிப்பிட்டிருந்தார். அவர் விரைவில் குணமடைய திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

மையோசிடிஸ் என்றால் என்ன? இதன்மூலம் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன? மருத்துவ ரீதியான தீர்வுகள்?

“மையோசிடிஸ், மிகவும் அரிதான தசை அழற்சி நோய். பொதுவாக, இந்த நோய் ஆண்களைவிடப் பெண்களை அதிகம் தாக்கும். 15 முதல் 45 வயதுடையவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். தசை பலவீனம், நடை பயிற்சி செய்யும்போது ஏற்படும் அதிகமான சோர்வு, சாப்பிடும்போது விழுங்கவே முடியாத பிரச்சினைகள்தான் இந்த நோய்க்கான முதல் அறிகுறிகள். பொதுவாக, மையோசிடிஸ் நோய் பல வகைகளாக பிரிக்கப்படுகிறது. மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களால், சேரில் இருந்து எழுந்து நடக்க முடியாது.

மாடிப் படி ஏறுவதில் சிரமம் உண்டாகி, மூச்சுவிட கூட பெரிய அளவில் கஷ்டம் இருக்கும். உடல் அதிக சோர்வாகவும் இருக்கும். இதனைத் தெரிந்துகொள்ள ‘ஆட்டோ இம்யூன் பேனல் பிளட் டெஸ்ட்’ என்ற பரிசோதனையை செய்ய வேண்டியிருக்கும். சிலருக்கு தசை அல்லது சருமத்தை பயாப்சி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும். சிலருக்கு ‘எலக்ட்ரோமையோகிராபி’ (Electromyography அல்லது EMG) மற்றும் எம்ஆர்ஐ பரிசோதனைகள் தேவைப்படும்.

மையோசிடிஸ் என்பது… – தெளிவாக சொல்வதென்றால், ஃபுட்பால் விளையாட்டில் சேம் சைடு கோல் போடுவது போல… திருடனை விரட்ட வேண்டிய போலீஸ் உரிமையாளரை விரட்டுவது போல. நம் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே நம் உடம்புக்கு நேர்மறையாக வேலை செய்யாமல் எதிர்மறையாக வேலை செய்யும். ஒரு கிருமித் தாக்குதலில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள பயன்படும் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கை தந்திருக்கும் கொடை. எத்தனையோ உருமாற்றம் கண்ட கிருமி தாக்குதல்களில் இருந்து தப்பித்த உலகம் தற்போது கொரோனா தாக்குதலையும் தாண்டி வந்து நிற்கிறது. இதற்கு முழுமையான காரணம் நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தான்.

இதில் ஒரு சிலருக்கு மட்டும் அரிதாக இந்த எதிர்ப்பு சக்தி தன் உடலுக்கு எதிராகவே வேலை செய்ய ஆரம்பித்துவிடும். முக்கியமாக, கடந்த கொரோனா காலங்களுக்கு பிறகு ஆட்டோ இம்யூன் நோய் பாதிப்புகள் நிறைய பேருக்கு வந்திருக்கிறது. அடுத்த முக்கியமான காரணம் என்னவென்றால் இந்த நோய்க்கான விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் ஏற்படவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் ருமட்டாலஜி துறை வளர்ச்சியடையாத காலகட்டமாக இருந்தது. இப்போது அப்படி இல்லை. நிறைய அதிநவீன சிகிச்சைகள் இருக்கின்றன. முக்கியமாக மையோசிடிஸ் ஒருவருக்கு வந்துவிட்டால் அதனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், அதனை முழுவதுமாக குணப்படுத்திவிட முடியுமா என்றால் அது கடினம். இதுவும் நீரிழிவு நோய் போலதான்.

ஆட்டோ இம்யூன் நோய், ருமட்டாலஜி நோய்கள் பாதிக்கும் விதம்

தசைகள், மூட்டு இணைப்புகள், ரத்த நாளங்கள் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும். நோயின் தன்மை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். முக்கியமாக பலருக்கு இந்நோய் உடல் முழுவதும் தசைபிடிப்புகளில் பரவி இருக்கும். சில நேரங்களில் மூட்டுகளை அசைக்க முடியாது. உடல் தசைகளை அசைத்தாலும் அதிக வலி தரக்கூடியது. இது உடல் முழுவதும் இருக்கும்.

இந்த நோய்க்கு சிகிச்சை என்று பார்த்தால் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைப்பதற்கான மருந்துகளைக் கொடுக்க வேண்டும். மேலும், இயற்கை உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக காய் பழங்களை அதிகம் எடுத்துக் கொண்டால் கொஞ்சம் வலியில் நிவாரணம் கிடைக்கும்.நிறைய பேர் தங்களுக்கு வந்திருப்பது மையோசிடிஸ் என்று தெரியாமலேயே கை வைத்தியம் பார்ப்பது தவறான செயல்பாடுகளுக்கு வழி வகுக்கும். இதற்கான மருத்துவம் என்று பார்த்தால் ருமட்டாலஜி தான் சரியான வழிமுறை. முறையான இயன் மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றினால் அதனை கட்டுப்பாட்டில் வைக்கமுடியும்.

முக்கியமாக விழிப்புணர்வுக்காக ஒரு தகவல் சொல்கிறேன். இந்த நோய் வந்தால் மக்கள் கவலைப்பட்டுக்கொண்டு, கை வைத்தியம் போன்றவற்றை செய்துகொண்டிருக்காமல் உடனடியாக அரசு மருத்துவமனைகளை நாடுவது சிறப்பு. தற்போது எல்லா விதத்திலும் நல்ல தரமான நவீன சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படுகிறது.

தொகுப்பு: சரஸ்

The post மையோசைடிஸ் ஆபத்தானதா? appeared first on Dinakaran.

Read Entire Article