நன்றி குங்குமம் டாக்டர்
பொதுவாக நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் மைதா கலந்த உணவுகளால் உடலில் நச்சுத் தன்மை அதிகரிக்கிறது. மைதா என்பது கோதுமையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு ரசாயனப் பொருட்கள் கலந்து வெண்மை நிறமாக்கப்பட்ட ஒருவகை பவுடர். இதனை பயன்படுத்தி நூடுல்ஸ், ரொட்டி, இடியாப்பம், தோசை போன்ற உணவுகள் தயாரிக்கப்படுகிறது. ஆனால் அவை மனித உடலுக்குள் சென்று தேவையற்ற நோய்களை உருவாக்குகிறது. இதனால், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த மைதாவை தடை செய்துள்ளனர். மைதா கலந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் தோன்றும் நோய்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.
நீரிழிவு நோய்
மைதாவில் கிளைசெமிக் இன்டெக்ஸ் நிறைந்துள்ளது. இது உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தக் கூடியது. எனவே தொடர்ந்து மைதா உணவை உண்டு வந்தால் சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் உருவாகும் வாய்ப்புகள் அதிகம். இது தொடர்பான ஆராய்ச்சிகளில் 90 சதவீதம் உறுதியாகியுள்ளது.
உடல் பருமன் அதிகரிக்கும் மைதா கலந்த உணவுகள் உடல் பருமனை அதிகரிக்கச் செய்யும். இதனால் ரத் தஅழுத்தம், இருதய கோளாறு நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
மலச்சிக்கல் பிரச்னை
மைதாவில் தயாரிக்கப்பட்ட உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்ளும்போது மலச்சிக்கல் பிரச்னை உருவாகும். எனவே, மைதா அதிகளவில் எடுப்பதை தவிர்த்துவிட்டு, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது.
இருதய கோளாறு
மைதாவிலிருக்கும் கெட்ட கொழுப்புகள் ரத்த நாளங்களில் படியும் தன்மை கொண்டுள்ளதால், இருதய கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மேலும், ரத்தக் குழாய் அடைப்பு போன்ற ஆபத்தான நோய்களையும் ஏற்படுத்தும்.
செரிமானம்
நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆனால்தான் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஆனால் மைதாவை தொடர்ந்து சாப்பிட்டால் செரிமான கோளாறுகள் ஏற்படுவது நிச்சயம். செரிமான கோளாறுகள் ஏற்பட்டால் உடல் ஆரோக்கியம் கெட்டு, தேவையில்லாத நோய்கள் உருவாகக்கூடும். நாம் அன்றாடம் சத்தான உணவு வகைகளில் கவனம் செலுத்தினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, மைதா விஷயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி உஷாராக இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
தொகுப்பு: பொ. பாலாஜிகணேஷ்
The post மைதா மாவை ஏன் தவிர்க்க வேண்டும்? appeared first on Dinakaran.