மேல்புறம் அருகே ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் ரேஷன் கடை: விரைவில் திறக்க கோரிக்கை

3 days ago 4


அருமனை: அருமனை அருகே மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் மலையடி ஊராட்சி சாணி கிராமத்தில் சுமார் 500 ரேஷன் அட்டைதாரர்கள் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதையடுத்து சாணி கிராமத்தில் ரேஷன் கடை அமைக்ககோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் நடவடிக்கை இல்லாததால் கிராம மக்கள் தாங்களாகவே பிரித்த பணத்தில் 2 சென்ட் நிலத்தை வாங்கி அதனை அரசுக்கு வழங்கினர். பின்னர் ரூ.9 லட்சத்து 13 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து அங்கு ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இந்த கட்டிடம் கட்டி முடித்து தற்போது வரை 16 மாதங்களை கடந்தும் இதுவரை ரேஷன் கடை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.

இதனால் அப்பகுதி மக்கள் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பொருட்கள் வாங்கி வர வேண்டிய நிலை இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர். எனவே கிராம மக்கள் நலன்கருதி புதியதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை திறந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது கட்டிட பணிகள் முடித்து மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும், அங்கு ரேஷன் கடை துவங்க வேண்டியது அவர்கள் தான் எனவும் கூறியுள்ளார். அதிகாரிகளுக்குள் பேசி ரேஷன் கடையை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சாணி கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post மேல்புறம் அருகே ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் ரேஷன் கடை: விரைவில் திறக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article