சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழக அரசு, ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பவர் பம்பு இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோரின் அவசியப் பணியை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உதவிக்கரமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தில் 12,526 கிராம ஊராட்சிகளில் மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
31 ஆயிரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை தொகுப்பூதியத்தில் இயக்குபவர்கள் குறைவான ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.கடந்த 10 ஆண்டுகளாக 36 ஆயிரம் பேர் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிகிறார்கள்.
இவர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி நீர்த்தொட்டிகளை பராமரித்து, நீரை சுத்தமாக சேவைப்பணியாகும். வைத்துக்கொண்டு, சீராக நீரை வழங்குவது பொது மக்களுக்கு அன்றாட அவசியத் தேவையான குடிநீர் விநியோகம் செய்து வரும் இவர்கள் பணியின் போது சில நேரங்களில் மின்சாரம் தாக்கி பாதிக்கப்படுவதும், இறப்பதும் நிகழ்ந்தது.
பணியாளர்களின் பணிப்பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை தேவை. அதாவது மும்முனை மின்சாரம் இரவு நேரங்களில் 10 மணிக்கு வழங்கப்படும் போது காத்திருந்து மின் மோட்டாரை இயக்கி நீரேற்றுகிறார்கள். அவர்களுக்கு டார்ச் லைட்டும் பாதுகாப்புக்கு ரப்பர் கையுறைகளையும் வழங்க வேண்டும்.
மேலும் தற்காலிக பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற வேண்டும். பணியாளர்களுக்கு ஊதியத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும். குறிப்பாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கான காலிப்பணியிடங்களை காலம் தாழ்த்தாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
பணியில் இருக்கும் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும். எனவே தமிழக அரசு, ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பவர் பம்பு இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோரது கோரிக்கைகளான பணிப்பாதுகாப்பு, பணி நிரந்தரம், பணிக்கொடை, வாரிசுகளுக்கு பணி, ஓய்வூதியம் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.