‘மேலே’ அனுப்புது மேலக்கோட்டை விலக்கு; விருதுநகர் நான்கு வழிச்சாலையில் பலி வாங்கும் ‘ஆக்சிடண்ட் ஸ்பாட்’ மேம்பாலம் அமைக்கப்படுமா?.. 20 கிராம மக்கள் எதிர்பார்ப்பு

10 hours ago 1


திருமங்கலம்: திருமங்கலம் – விருதுநகர் நான்கு வழிச்சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளால், மேலக்கோட்டை விலக்கு பகுதி ஆக்சிடண்ட் ஸ்பாட் ஆக உருமாறி வருகிறது. இதனால் அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம், திருமங்கலத்திலிருந்து விருதுநகர் வழியாக கன்னியாகுமரி செல்லும் நான்கு வழிச்சாலையில் மேலக்கோட்டை கிராமம் அமைந்துள்ளது. இந்த மேலக்கோட்டை விலக்கு பகுதியில் விருதுநகர் மார்க்கத்திலிருந்து வரும்போது துவங்குவதாகவும், திருமங்கலம் மார்க்கத்திலிருந்து செல்லும்போது முடிவதாகவும் சர்வீஸ் ரோடு அமைந்துள்ளது. இதற்கு நடுவே மேலக்கோட்டை விலக்கு பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையிலிருந்து முக்கிய நெடுஞ்சாலையான கூடக்கோவில் சாலை பிரிகிறது. இது மேலக்கோட்டை, நடுக்கோட்டை, கீழக்கோட்டை, மைக்குடி, உலகாணி, சின்ன உலகாணி, கல்லணை, கூடக்கோவில் என 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.

இதனால் மேலக்கோட்டை விலக்கில் உள்ள நான்கு வழிச்சாலையை கடந்து, இக்கிராம மக்கள் தினசரி திருமங்கலம் சென்று வருகின்றனர். அப்போது விபத்துகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று விபத்துகள் நடைபெற்று மூவர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் மேலக்கோட்டை விலக்கில் விபத்துகள் நடைபெறுவதால், சமீபகாலமாக அப்பகுதி ஒரு ‘ஆக்சிடெண்ட் ஸ்பாட்’ ஆக உருமாறியுள்ளது. எனவே நான்கு வழிச்சாலையை கடந்து செல்ல வசதியாக இப்பகுதியில் மேம்பாலம் அல்லது அண்டர் கிரவுண்ட் பாலம் அமைக்க வேண்டும் என மேலக்கோட்டை முதல் கூடக்கோவில் வரையிலான 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கீழக்கோட்டையை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனுஷ்கோடி கூறுகையில், ‘‘மேலக்கோட்டை விலக்கு பகுதியில் சர்வீஸ் ரோட்டில் இருந்து இருபுறமும் நான்கு வழிச்சாலையை கடந்து செல்ல முயலும் பலரும் படுவேகமாக வரும் வாகனங்களால் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். பகல் நேரத்தில் ஓரளவு சமாளிக்கும் வாகன ஓட்டிகள், இரவில் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். நான்கு வழிச்சாலையில் வாகனங்கள் அதிக வேகத்தில் வருவதால், டூவீலர் அல்லது கார்கள் உள்ளிட்டவை கடக்கும் முன்பு விபத்துகள் ஏற்படுகின்றன. போலீசார் பேரிகார்டுகளை வைத்து நான்கு வழிச்சாலையில் வைத்து தடுப்பு ஏற்படுத்த வேண்டும். இப்பகுதியில் உயரம் குறைந்த உயரத்தில் இருக்கும் ஹைமாஸ் விளக்கினை உயர்த்த வேண்டும்’’ என்றார்.

திருமங்கலம் டீக்கடை ஊழியர் சசி கூறியதாவது, ‘‘மேலக்கோட்டை விலக்கில் தினசரி விபத்துகள் நடந்து வருகிறது. நான்கு வழிச்சாலையில் படுவேகமாக வரும் வாகனங்களால், இந்த விலக்கு ரோட்டில் சர்வீஸ் ரோட்டில் இருந்து நான்கு வழிச்சாலையை கடக்கும் முன்பு வாகன விபத்தில் சிக்கி பலரும் உயிரிழக்கின்றனர். திருமங்கலம் பகுதியிலிருந்து நான்கு வழிச்சாலையில் வரும் வாகனங்கள், கரிசல்பட்டி மேம்பாலத்திலிருந்து மேலக்கோட்டை விலக்கில் கீழே இறங்கும் நிலை உள்ளது. இதனால் கார்கள், பஸ்கள், லாரிகள் படுவேகமாக வருகின்றன. இதுவே விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது. எனவே நான்கு வழிச்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மேலக்கோட்டை விலக்கில், மேம்பாலம் அல்லது அன்டர் கிரவுண்ட் பாலம் அமைத்தால் மட்டுமே விபத்துகளை தடுக்க முடியும்’’ என்றார்.

அதிகாரிகள் கூறுவது என்ன?
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்டபோது, ‘‘மேலக்கோட்டை விலக்கில் ஏற்கனவே ஹைமாஸ் விளக்கு வைக்கப்பட்டுள்ளது. (இந்த விளக்கு நேற்று முன்தினம் இரவு பஸ் மோதி உடைந்தது குறிப்பிடத்தக்கது). இதன் உயரத்தினை அதிகரிக்க வாய்ப்பில்லை. ஏனெனில், உயரம் அதிகமுள்ள ஹைமாஸ் விளக்கு வைக்க கீழ்பகுதியில் அதிகளவு இடம் தேவைப்படும். நான்கு வழிச்சாலையில் தற்போதுள்ள இடம் அதற்கு போதுமானதாக இல்லை. நான்கு வழிச்சாலையில் வேகத்தடைகள் அமைக்க முடியாது. சர்வீஸ் ரோட்டில் தான் அதனை அமைக்க இயலும். மேம்பாலம் அல்லது தரைப்பாலம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகள் மட்டுமே பதில் அளிக்க இயலும்’’ என்றனர்.

The post ‘மேலே’ அனுப்புது மேலக்கோட்டை விலக்கு; விருதுநகர் நான்கு வழிச்சாலையில் பலி வாங்கும் ‘ஆக்சிடண்ட் ஸ்பாட்’ மேம்பாலம் அமைக்கப்படுமா?.. 20 கிராம மக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article