மேலூர், ஆண்டிபட்டி சந்தைகளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை : தீபாவளி சிறப்பு சந்தை களை கட்டியது

3 weeks ago 4

 

மேலூர்/ ஆண்டிபட்டி : தீபாவளியை முன்னிட்டு மேலூர், ஆண்டிபட்டி, அருப்புக்கோட்டை சந்தைகளில் நேற்று ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின.மதுரை மாவட்டம், மேலூர் நகர் சந்தைப்பேட்டையில் வாரந்தோறும் ஞாயிறு மாட்டு சந்தை, திங்கட்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறும். நேற்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் அதிகாலை முதலே கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் தங்கள் ஆடுகளை சந்தைக்கு கொண்டு வந்தனர்.

இவற்றை வாங்குவதற்காக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகரை சேர்ந்த வியாபாரிகள் குவிந்திருந்தனர். தீபாவளிக்கு ஆடுகளின் தேவை அதிகம் இருந்ததால், விலை சற்று அதிகமாக காணப்பட்டது. ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாகவும், எதிர்பார்த்த விலை கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் வாரந்தோறும் திங்கள்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். சந்தைக்கு ஆண்டிபட்டி சுற்று வட்டாரம் மற்றும், தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் நேரில் வந்து ஆடுகளை வாங்கி செல்வர்.தீபாவளியை முன்னிட்டு நேற்று நடந்த சந்தையில் வெள்ளாடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் ஆண்டிபட்டி சந்தையில் ரூ.1 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆண்டிபட்டி ஆட்டுச் சந்தையில் 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடுகள் ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் வெள்ளாட்டின் விலை அதிகம் காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அருப்புக்கோட்டை

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நேற்று ஆட்டுச்சந்தை நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. அருப்புக்கோட்டை, சேலம், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகள் வாங்க வந்திருந்தனர். ஆடு எடைக்கு ஏற்ப ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. மொத்தம் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post மேலூர், ஆண்டிபட்டி சந்தைகளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை : தீபாவளி சிறப்பு சந்தை களை கட்டியது appeared first on Dinakaran.

Read Entire Article