மேலூர், மார்ச் 19: மேலூர் அருகே திருவாதவூரில் திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி இறங்கும் திருவிழா நடைபெற்றது. மேலூர் அருகில் உள்ள திருவாதவூரில் பழமையான திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் பங்குனி விழாவிற்காக பக்தர்கள் 40 நாட்கள் விரதம் இருப்பார்கள். கோயிலின் கொடியேற்றம் மார்ச் 2ல் நடைபெற்றது. ஆண்டு தோறும் இக் கோயில் திருவிழா 18 நாட்கள் நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து 18 நாட்களும் பாஞ்சாலி சபதம் குறித்த நிகழ்வுகளை இக்கோயிலில் நிகழ்ச்சியாக நடத்தப்படும். மேலும் திரவுபதி அர்ச்சுனன் திருக்கல்யாணம், அர்ச்சுனன் தபசு போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றது.
இரு தினங்களுக்கு முன்பு திரவுபதி சபதம் எடுத்து, கூந்தலை விரித்த கோலத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின் துரியோதனனை வதம் செய்து, கூந்தலை அள்ளி முடியும் நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து திரவுபதி அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு, தீவட்டி மேள தாளங்கள் முழங்க முக்கிய வீதிகளில் சுற்றி வந்து, கோயிலை சென்றடைந்தார். இந்நிலையில் திருவிழாவின் முக்கிய அங்கமாக பூக்குழி இறங்கும் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இந்த பூக்குழியில் விரதம் இருந்த 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறங்கி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். மேலூர், திருவதாவூர், உலகுபிச்சான்பட்டி, வெள்ளமுத்தான்பட்டி, பழையூர், மாணிக்கம்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இத் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
The post மேலூர் அருகே திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி இறங்கும் திருவிழா appeared first on Dinakaran.