மேலப்புலியூர் கிராமத்தில் 29 கிலோ குட்கா பொருட்கள் வைத்திருந்தவர் கைது

2 hours ago 2

 

பெரம்பலூர், நவ.17: பெரம்பலூரர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 29 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த மளிகைக் கடைக்காரரை பொலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடைவடிக்கைகள் மேற் கொண்டு வருகிறார்.

அதன்படி, நேற்று (16ஆம் தேதி) சனிக்கிழமையன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படையினர் நடத்திய சோதனையில், பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலப்புலியூர் கிராமத்தில் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த சூப்பரமணியன் மகன் சக்திவேல் (38) என்பவர் தனக்குச் சொந்தமான மளிகை கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்குப் புறம்பாக வைத்து விற்றது தனிப்படையினருக்குத் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து தனிப்படை எஸ்எஸ்ஐ சிவக்குமார், எஸ்எஸ்ஐ ரமேஷ் மற்றும் அவரது குழுவினர் சக்திவேலை கைது செய்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பெரம்பலூர் காவல் நிலைய எஸ்எஸ்ஐ பாண்டியன் மேற்படி சக்திவேல் மீது வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து ஹான்ஸ் (21.9kg), கூல்=லிப் (200g), மற்றும் விமல் பான்மசாலா (7.275kg) ஆகிய குட்கா பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post மேலப்புலியூர் கிராமத்தில் 29 கிலோ குட்கா பொருட்கள் வைத்திருந்தவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article