மேற்குவங்க மாநில சட்ட ஒழுங்கை பாலியல் தொழிலாளிகளுடன் ஒப்பிட்டு பேசிய பாஜக அமைச்சர்: திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம்

2 weeks ago 4

கொல்கத்தா: மேற்குவங்க மாநில சட்டம் ஒழுங்கை பாலியல் தொழிலாளிகளுடன் ஒப்பிட்டு பேசிய பாஜக அமைச்சரின் கருத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அனுப்ரதா மொண்டல், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி மேற்கு வங்க அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில், போல்பூர் காவல் நிலைய ஆய்வாளர் லிட்டன் ஹல்தரின் தாயார் மற்றும் மனைவியை மிகவும் தரக்குறைவான மற்றும் தகாத வார்த்தைகளால் திட்டி, அவர் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இந்த அருவருப்பான பேச்சை மூடி மறைக்க முயற்சிப்பதாக பாஜக குற்றம் சாட்டி உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய அமைச்சருமான சுகந்தா மஜும்தார் அளித்த பேட்டியில், ‘மேற்கு வங்கத்தின் சட்டம்-ஒழுங்கை, கொல்கத்தாவின் மிகப்பெரிய சிவப்பு விளக்குப் பகுதியான சோனாகாச்சியின் பாலியல் தொழிலாளர்களைப் போல மாற்றிவிட்டீர்கள்’ என்று ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்தார். மஜும்தாரின் இந்த பேச்சைக் கண்டித்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி தனது எக்ஸ் தளத்தில், ‘இதுதான் பாஜகவின் அருவருப்பான அரசியல். பெண்களை அவமதிக்கும் வெறுப்பு மனப்பான்மையின் வெளிப்பாடாகும். அமைச்சர் மஜும்தார் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்த மஜும்தார், ‘பாலியல் தொழிலாளர்களுக்குக் கூட ஒரு நெறிமுறையும் மரியாதையும் இருக்கிறது, ஆனால் அது கொல்கத்தா காவல்துறையிடம் இல்லை என்றுதான் கூறினேன். அனுப்ரதா மொண்டலின் அருவருப்பான பேச்சை மறைக்கவே திரிணாமுல் இவ்வாறு திசை திருப்புகிறது’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

The post மேற்குவங்க மாநில சட்ட ஒழுங்கை பாலியல் தொழிலாளிகளுடன் ஒப்பிட்டு பேசிய பாஜக அமைச்சர்: திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article