மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஒரு மேஜிக் தோட்டம்

3 weeks ago 6

விவசாயத்தில் அவ்வப்போது சில புதுமைகள் அரங்கேறுவது உண்டு. அந்தப் புதுமைகள் பிற்காலத்தில் பல விவசாயிகளுக்கு பயனுள்ளதாக மாற்றம் கொள்ளும். அப்படி ஒரு புதுமையை நிகழ்த்திக் காட்டி இருக்கிறார். ராஜபாளையத்தைச் சேர்ந்த ஜெயக்குமார். தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா போன்ற வெளிநாடுகளிலும், மேற்கு வங்கம், கேரளா போன்ற இந்தியாவின் ஒருசில பகுதிகளிலும் மட்டுமே விளையும் லோங்கன் பழத்தை நமது தமிழகத்தில் முதன்முறையாக விளைவித்து மகசூல் எடுத்திருப்பதுதான் இவர் செய்த புதுமை. இந்த லோங்கோன் பழத்திலும் பல்வேறு வகைகளை சேகரித்து வந்து, சோதனை முறையில் பயிரிட்டு வெற்றி கண்டுள்ள ஜெயக்குமாரை சந்தித்தோம். ராஜபாளையத்தின் மிக அழகிய பகுதிகளில் அய்யனார் கோயிலுக்கு முக்கிய இடம் உண்டு. மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து அருவியில் கொட்டும் நீர் ஆறாகப் பெருகி ஓடும் இடத்தில் இந்தப் பகுதியில்தான் ஜெயக்குமாரின் பண்ணைத்தோட்டம் அமைந்திருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலிலும் மலையில் இருந்து தரை இறங்கி வீசும் காற்று இதமாக வருடிய ஓரு மாலைப்பொழுதில் லோங்கன் பழங்களைப் பறித்துக் கொடுத்தவாறே பேச ஆரம்பித்தார் ஜெயக்குமார்.

“ தேன் உற்பத்தி செய்வதுதான் எனது பிரதான தொழில். இதுசம்பந்தமாக பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்வேன். வெளிநாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் அங்கு கிடைக்கும் பழமரச்செடிகளை வாங்கி வந்து நம்மூரில் வளர்த்துப் பார்ப்பேன். இதை நான் நீண்ட காலமாக ஒரு பொழுதுபோக்காகவே செய்து வருகிறேன். அந்த ரீதியில்தான் தாய்லாந்தில் இருந்து லோங்கன் செடிகளை வாங்கி வந்து இங்கு நடவு செய்தேன். இந்தப்பகுதியில் மாந்தோப்புகள் அதிகம். இந்த நிலத்தையும் சமீபத்தில் மா மரங்களுடன் வாங்கினேன். மா மரங்களை வெட்டி விட்டு லோங்கன் செடிகளை நட்டேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. இப்போது அனைத்து செடிகளும் பழங்கள் தருகின்றன’’ என ராஜபாளையத்திற்கு லோங்கன் அறிமுகம் ஆன கதையுடன் பேச ஆரம்பித்தவர் மேலும் தொடர்கிறார்.

“ லோங்கோனில் பல வெரைட்டி இருக்கிறது. இதில் பிங்பாங், ஒய்ட், பிளாக், ரூபி, போர்சீசன், சீட்லெஸ் ஆகிய ரகங்களை இங்கு நடவு செய்திருக்கிறேன். அதேபோல ஆப்பிள், ஆரஞ்ச், கமலா, மில்க் ப்ரூட், செர்ரி, ஜெபாடிகாபா (மர முந்திரி), அச்சாச்சாகு (மங்குஸ்தான் ரகம்), ஸ்வீட் லூபி, ஸ்டார் ப்ரூட் பல வகை பழச்செடிகளை நடவு செய்திருக்கிறேன். ஆரஞ்சில் கமலா, சைனீஸ், நாக்பூர் போன்ற ரகங்களை வைத்திருக்கிறேன். செர்ரியில் சூரியகாம், லில்லி வில்லி, டென்னிஸ் பால் செர்ரி உள்ளிட்ட வகைகளை சாகுபடி செய்திருக்கிறேன். அத்தனையும் பழங்கள் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன. இதில் லோங்கனை நம்மூர் விவசாயிகள் வணிக ரீதியாக பயிரிட்டு நல்ல லாபம் பார்க்கலாம். ஒரு கிலோ ரூ.400 என இந்தப்பழம் விற்பனை செய்யப்படுகிறது. நாம் ரூ.200 என விற்றாலே ஓரளவு நிறைவான லாபம் ஈட்டலாம்’’லோங்கனை எப்படி பயிர் செய்வது என நாம் கேட்டபோது அதுகுறித்தும் விளக்கினார்.

“ 20 அடி இடைவெளி விட்டு இதை நடவு செய்யலாம். வாரத்திற்கு 2 முறை பாசனம் செய்தால் போதும். நான் இயற்கை முறையில்தான் விளைவிக்கிறேன். நல்ல பலன் கொடுக்கிறது. மாட்டு எரு, புண்ணாக்கு போன்றவற்றைத்தான் உரமாக போடுகிறேன். இதில் பெரியளவுக்கு நோய், பூச்சி தாக்கம் வரவில்லை. மாவுப்பூச்சி பிரச்னை இருந்தது. அதற்கு மீன் அமிலம் தெளித்தேன். நல்ல ரிசல்ட் கிடைத்தது. 2 ஆண்டுகளில் காய்க்க ஆரம்பித்துவிடும். ஆண்டுக்கு 2,3 முறை காய்க்கும். 5 வருடங்களில் நல்ல காய்ப்பு இருக்கும். 1 மரத்திற்கு 40, 50 கிலோ பழங்கள் மகசூலாக கிடைக்கும். ஏக்கருக்கு 200 மரங்கள் வரை நடலாம். லோங்கன் செடி வலுவாக இருக்கும். பழங்களும் வலுவாக இருக்கும். ஆனால் காற்றடிக்கும்போது செடிகளின் கொப்புகள் ஒடிந்து விழ வாய்ப்பு அதிகம். இந்தப் பிரச்னையை சமாளிக்க கவாத்து செய்வது அவசியமான ஒன்று. கவாத்து செய்து கொண்டே இருந்தால் மரம் வளராமல் பெருத்து வலுவானதாக மாறும். கேரளாவில் ரம்புட்டான், மங்குஸ்தான் போன்ற பழங்கள் நன்றாக வரும். அந்தளவுக்கு நம்மூரில் விளைச்சல் இருக்காது. ஆனால் லோங்கன் அதற்கு நேர்மாறானது. கேரளாவை விட நம்மூரில் நன்றாக வருகிறது’’ என்கிறார்.
தொடர்புக்கு:
ஜெயக்குமார் – 95855 32326.

The post மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஒரு மேஜிக் தோட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article