
கொல்கத்தா,
மத்திய அரசின் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் மேற்கு வங்காளத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.அங்குள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 11 மற்றும் 12-ந் தேதிகளில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமான வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.இந்த நிலையில் இந்திய மதசார்பற்ற முன்னணி (ஐ.எஸ்.எப்.) சார்பில் கொல்கத்தாவில் நேற்று வக்பு சட்டத்துக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னணியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான நவுஷாத் சித்திக் உரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வாகனங்களில் கொல்கத்தாவுக்கு கிளம்பினர். ஆனால் இந்த கூட்டம் அனுமதியின்றி நடத்தப்படுவதாக கூறி அவர்களை போலீசார் வழியில் தடுத்தனர். அதன்படி தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தின் போஜர்காட் பகுதியில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து ஐ.எஸ்.எப். தொண்டர்களை தடுத்து நிறுத்தினர்.இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தடுப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு செல்ல முயன்றனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் போலீசாரின் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன.
இந்த பயங்கர மோதல் மற்றும் வன்முறையில் போலீசார் உள்பட ஏராளமானோர் காயம் அடைந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.பின்னர் போலீசாரை கண்டித்து போராட்டக்காரர்கள் அந்த தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல மணி நேரமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே உயர் அதிகாரிகள் மற்றும் ஏராளமான போலீசார் அங்கே வரவழைக்கப்பட்டனர். பின்னர் போராட்டக்காரர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த போராட்டம் மற்றும் வன்முறையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.