மேற்கு வங்காளத்தில் அதிர்ச்சி: டாக்டர்கள், நர்சுகள் மீது தாக்குதல்; 4 பேர் கைது

2 months ago 24

வடக்கு 24 பர்கானாஸ்,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரருகே சகோர் தத்தா மருத்துவமனையில் 30 வயது பெண் ஒருவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவருடைய உறவினர்கள், டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை கண்டித்து இளநிலை டாக்டர்கள் மற்றும் நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை சந்திப்பதற்காக பாரக்பூர் காவல் ஆணையாளர் அலோக் ரஜோரியா மருத்துவமனைக்கு நேரில் சென்றார். இந்த சம்பவத்தில், சி.சி.டி.வி. பதிவுகளின் அடிப்படையில், 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோன்று, மேற்கு வங்காள சுகாதார செயலாளர் நாராயண் ஸ்வரூப் நிகாம் மருத்துவமனைக்கு நேரில் சென்று, பணி நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த டாக்டர்கள் மற்றும் நர்சுகளை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து, இன்று முதல் கூடுதல் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்படும் என்று நிகாம் கூறியுள்ளார்.

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் ஒரு மாதத்திற்கும் கூடுதலாக டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் மற்றொரு சம்பவத்தில் சிகிச்சையின்போது பெண் மரணம் அடைந்த விவகாரத்தில், டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மீது தாக்குதல் நடத்திய நிலையில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் உறவினர்களான 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். மருத்துவமனையில் பாதுகாப்பு தொடர்புடைய சில விசயங்கள் பற்றி இன்று பேசப்பட்டது என காவல் ஆணையாளர் ரஜோரியா கூறினார்.

Read Entire Article