மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை; அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

3 hours ago 2

விகேபுரம்: கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ெபய்து வரும் தொடர் மழை காரணமாக அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவி உள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் தினமும் நெல்லை மாவட்டம் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்வார்கள். அதுவும் விடுமுறை நாட்களில் அகஸ்தியர் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.

இந்நிலையில் தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஓட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்று சுழற்சி காரணமாக நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ெதாடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் வெளியூரில் இருந்து அகஸ்தியர் அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா வெளியிட்ட அறிக்கை: பாபநாசம் பகுதியில் தற்போது பெய்த மழையின் காரணமாக அகஸ்தியர் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பதால், பொதுமக்களின் பாதுகாப்பினை கருதி அருவியில் குளிப்பதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிவித்து கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அம்பை: நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது. அங்குள்ள காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி, செங்கல்தேரி உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரவு முழுவதும் மழை நீடித்தது. நேற்றும் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 487 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர்வரத்து கடுமையாக அதிகரித்து உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி நேற்று முதல் மணிமுத்தாறு அருவியில் குளிக்கவும், சூழல் சுற்றுலாவிற்கு வருகை தரவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

The post மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை; அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article